பிரான்ஸில் மேலும் 14 அணுமின்சார நிலையங்களை நிறுவத் திட்டமிடுகிறார் மக்ரோன்.
நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய பிரான்ஸின் அணுமின்சார நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தைச் சமர்ப்பித்திருக்கிறார் ஜனாதிபதி மக்ரோன். ஏற்கனவே 56 அணுமின்சார நிலையங்கள் பிரான்ஸில் பாவனையிலிருக்கின்றன.
“பிரான்ஸின் அணுமின்சாரத் தொழில்நுட்பத்துக்கு புத்துயிர் கொடுப்பது அவசியம்” என்று குறிப்பிட்ட இம்மானுவேல் மக்ரோன் முதல் கட்டமாக ஆறு அணுமின்சார நிலையங்களைக் கட்டும் திட்டத்தை முன்வைத்திருக்கிறார். அவற்றின் எண்ணிக்கையைப் 14 ஆக உயர்த்துவதே அவரது உத்தேசமாகும்.
தற்போது பிரான்ஸில் பாவனையிலிருக்கும் அணுமின்சார நிலையங்கள் 1980 களின் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டவை. கடைசியாக ஒரு அணுமின்சார நிலையத்தைப் பிரான்ஸ் பாவனைக்கு உட்படுத்த ஆரம்பித்து 20 வருடங்களாயிற்று. மேலுமொன்று கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அணுமின்சார நிலையங்களை பிரான்ஸ் அரசின் எரிசக்தி நிறுவனமே கட்டியெழுப்பி நிர்வாகிக்கும். ஏற்கனவே பிரான்ஸிலும் ஐக்கிய ராச்சியத்திலும் அணுமின்சார உலைகளை இயக்கிவரும் அந்த நிறுவனம் கடன் பழுவுடன் இழுபடுகிறது. சில பத்து பில்லியன் டொலர்களைத் தனது திட்டங்களுக்காக ஒதுக்கவிருக்கிறார் மக்ரோன்.
சூழலைச் சூடாக்கும் வாயுக்களை வெளியிடாத தொழில் நுட்பம் மூலமே 100 விகித எரிசக்தியை 2050 இல் பிரான்ஸ் பெறவேண்டும் என்ற குறிக்கோளை எட்டவே அணுமின்சார உலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதைத் தவிர காற்றாடிகளால் மின்சாரத்தை உண்டாக்கும் மையங்களும் நிறுவப்படவிருக்கின்றன. ஆனால், அவைகளின் எண்ணிக்கை குறைவானது.
தனது நாட்டின் 70 % மின்சாரத்துக்கு அணுமின்சார உலைகளிலேயே தங்கியிருக்கும் ஒரே நாடு பிரான்ஸ் ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்