அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகும் எண்ணத்துடன் வந்தவர்களில் 1,200 பேரை ஒரே நாளில் கைது செய்தது மெக்ஸிகோ.

ஜனாதிபதி டிரம்ப் காலத்தின் பின்னர் அமெரிக்காவுக்குள் களவாக நுழைய முற்படுபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எல்லை நாடான மெக்ஸிகோ அந்த எண்ணத்துடன் வந்துதனது நாட்டில் தங்கியிருந்த சுமார் 1,200 பேரை வியாழன்று மட்டும் கைது செய்திருப்பதாக அறிவித்தது.

அமெரிக்காவின் தெற்குப் பாகங்களில் எல்லைகளை அடுத்திருக்கும் மாநில ஆளுனர்கள் அதை நிறுத்த ஜோ பைடன் அரசை நிர்ப்பந்தித்து வருகிறார்கள். அமெரிக்க அரசு தன் பங்குக்கு எல்லை நாடான மெக்ஸிகோவினூடாக உள்ளே நுழைய வருபவர்களைத் தடுக்கும்படி நிர்ப்பந்தித்து வருகிறது. அதனால் நாடு முழுவதிலுமுள்ள 22 மாநிலங்களில் தேடுதல் நடத்தியே கைதுகளைச் செய்ததாக மெக்ஸிகோ அரசு தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 203 பேர் வயதுக்கு வராதவர்கள். 741 பேர் ஆண்களும், 322 பேர் பெண்களுமாகும். அவர்களில் பெரும்பாலானோர் கியூபா, கொலம்பியா, எல் சல்வடோர், குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களாகும். ஆப்கானிஸ்தான், ஆர்மீனியா, கனடா, சீனா, சுவிஸ், எத்தியோப்பியா, கானா, இத்தாலி, பாகிஸ்தான், சோமாலியா, துருக்கி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களும் கைதானவர்களில் அடங்குவர். 

ஜனவரியில் மெக்ஸிகோவில் கைதுசெய்யப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 78 % அதிகமானதாகும். அதே சமயம், அமெரிக்க எல்லை அதிகாரிகளால் மெக்ஸிகோவுடனான எல்லையில் நிறுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 153,941 ஆகும். அது கடந்த வருடம் ஜனவரியில் நிறுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.

தென்னமெரிக்க நாடுகள் சிலவற்றில் சாதாரணமாகிவிட்ட ஊழல்கள், போதைப்பொருள் தயாரிப்பாளர்களிடையேயான கொடூரமான வன்முறைகள், பசி, பஞ்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவை நோக்கி புலம்பெயர்பவர்கள் எண்ணிக்கை சமீப வருடங்களில் வேகமாக அதிகரித்திருக்கிறது. அவர்களில் பலர் மெக்ஸிகோவில் ஒரு வருடத்துக்கும் அதிகமாகத் தங்கி அமெரிக்காவுக்குள் நுழைய முயல்கிறார்கள்.

அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு இணங்கித் தென்னமெரிக்க நாட்டு அரசுகள் சக தென்னமெரிக்கர்கள் தமது நாடுகளுக்குள் நுழைய விசா பெற்றுக்கொள்ளவேண்டுமென்று சட்டத்தை மாற்றி வருகிறார்கள். மெக்ஸிகோவின் கெடுபிடிகளை எதிர்த்து அங்கே வாழும் அகதிகள் சிலர் தமது உதடுகளைத் தைத்துப் படங்களை எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பிரசுரித்துத் தமது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்