“உக்ரேன் இராணுவம் சரணடைந்தால் அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்,” என்கிறார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்.

உக்ரேனின் பல பகுதிகளிலும் ரஷ்யப் படைகளுடனான போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. உக்ரேனின் தலைநகரான கியவ் நகரை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்திருப்பதாக இரண்டு பக்கத்தினரிடமிருந்தும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ரஷ்யத் தொலைக்காட்சியில் தோன்றிய ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவ், “உக்ரேனியத் தலைமையுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்,” என்று தெரிவித்து அதற்கு முதல் உக்ரேனிய இராணுவம் தமது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரணடையவேண்டும் என்றார்.

இன்று காலையில் உக்ரேனிய ஜனாதிபதி செலின்ஸ்கி, “ரஷ்யாவின் நோக்கம் தன்னையும் தனது குடும்பத்தினரையும், அரசின் உயர்மட்டத்தினரையும் கைப்பற்றுவதே,” என்று தனது உரையில் தெரிவித்திருந்தார். தான் கியவ் நகரிலேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அங்கு ஒரு இராணுவப் பதுங்கு குழியில் இருந்து அவர் தனது இராணுவத்தை இயக்குவதாகக் குறிப்பிடப்பட்டது.

செர்கேய் லவ்ரோவ் தொலைக்காட்சியில் குறிப்பிட்டதற்கு மாறாக ஜனாதிபதி புத்தினின் சார்பில் அவரது காரியதரிசி பின்னர் குறிப்பிட்டதால் எது உண்மை என்று தெரியவில்லை. “உக்ரேனின் ஆளும் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை. உக்ரேனின் இராணுவப் பலத்தை முறியடிப்பதே ரஷ்யாவின் தாக்குதலுக்கான பிரதான நோக்கம்,” என்று லவ்ரோவ் குறிப்பிட்டிருந்தார்.

“செலின்ஸ்கியின் தலைமை பற்றி ரஷ்யாவுக்கு அதிக கருத்து வேறுபாடு இல்லை,” என்று புத்தின் சார்பின் பின்னர் தெரிவிக்கப்பட்டது. செலின்ஸ்கியின் நோக்கம் எதுவென்று தெரிந்தபின்னரே அவருடனான பேச்சுவார்த்தை பற்றி முடிவு செய்யப்படும் என்பது புத்தினின் காரியாலயத்திலிருந்து வந்த செய்தியாகும்.

பல பகுதிகளிலிருந்தும் வரும் செய்திகள் விரைவில் உக்ரேனியத் தலைநகரம் ரஷ்யாவிடம் விழுந்துவிடும் என்றே கணிக்கப்படுகிறது. ரஷ்ய இராணுவத்தின் முன்னகர்வை உக்ரேனிய இராணுவம் தடுக்கும் சக்தியுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே குறிப்பிடப்படுகிறது.

கியவ் நகரம் வீழ்ச்சியடையும் பட்சத்தில் ஜனாதிபதி செலின்ஸ்கியும் அவருக்கு நெருங்கியவர்களும் கைது செய்யப்படலாம் என்று பல அரசியல் கணிப்பாளர்களும் குறிப்பிடுகிறார்கள். பதிலாக ரஷ்யா தனக்குச் சாதகமான ஒரு குழுவை உக்ரேனில் ஆட்சியிலிருத்தலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்