கருங்கடலின் சர்ப்பத் தீவில் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட உக்ரேன் வீரர்கள் இறக்கவில்லை, சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கருங்கடலிலிருக்கும் சர்ப்பத் தீவு, உக்ரேனுக்கும் ருமேனியாவுக்கும் எல்லையாகக் கருதப்படும் ஒரு முக்கிய எல்லையாகும். ரஷ்யா தனது உக்ரேனிய ஆக்கிரமிப்பை ஆரம்பித்த முதல் நடவடிக்கையாக அந்தத் தீவைக் கைப்பற்றியது. அங்கிருந்த 13 உக்ரேனிய இராணுவத்தினரையும் சரணடையும்படி கேட்க அவர்கள் அதை மறுத்துக் கேவலமாகத் திட்டியமை சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதனையடுத்து அவர்கள் ரஷ்ய இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு இறுதி மரியாதையும் செய்யப்பட்டது.
ஆனால், அந்தப் பதின்மூன்று வீரர்களும் உயிரோடு ரஷ்ய இராணுவத்தினரால் போர்க்கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாக திங்களன்று உக்ரேன் இராணுவத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களை ரஷ்ய இராணுவம் விடுவிக்கவேண்டும் என்று உக்ரேன் கடற்படையினர் கோரியிருக்கிறார்கள்.
சுமார் 10 குடிமக்களையே கொண்ட சர்ப்பத்தீவிலும் அதைச் சுற்றியும் சரித்திரப் பிரசித்தி பெற்ற முக்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதன் பரப்பளவோ 0.17 சதுர கி.மீ மட்டுமே.
1788 இல் பிடோனிஸி கடற்போர் [Battle of Fidonisi] சர்ப்பத்தீவை அண்டியே நடந்தது. அச்சமயத்தில் மிகப் பெரும் பலம் வாய்ந்த ஒத்தமான் பேரரசுக்கும் ரஷ்யாவுக்கும் நடந்த அந்தப் போரில் ஒத்தமான் பேரரசின் கடற்படை தோல்வியடைந்தது. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ருமேனியாவின் வசமிருந்த அந்தத் தீவில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒன்றியத்தின் வானொலி அலை உள்வாங்கும் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்