ரஷ்ய இராணுவம் லுகான்ஸ்க் பகுதியில் பாடசாலையொன்றின் மீது குண்டு போட்டது.
உக்ரேனிலிருந்து பிரிந்து தனி நாடுகளாகப் பிரிந்த பகுதியான லுகான்ஸ்க் பிராந்தியத்திலிருக்கும் பாடசாலையொன்றை ரஷ்ய இராணுவம் குண்டு போட்டுத் தாக்கியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரேனின் தலைநகரைத் தாக்கிக் கைப்பற்ற இயலாமல் தனது தாக்குதல்களை உக்ரேனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் நடத்திக்கொண்டிருக்கும் ரஷ்ய இராணுவம் மக்கள் வாழும், தஞ்சம் புகும் இடங்களைக் குறிவைத்துத் தாக்கி வருவதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன.
உக்ரேனின் கிழக்குப் பகுதியிலிருக்கும் லுகான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். அந்தப் பகுதியை முழுசாகக் கைப்பற்ற ரஷ்ய இராணுவம் போரில் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பிட்ட பாடசாலையில் பலர் குடும்பங்களுடன் தஞ்சம் புகுந்திருந்தார்கள்.
பிலோஹோவ்ரிக்கா நகர பாடசாலைக்குள்ளிருந்து சுமார் 30 பேரைக் காப்பாற்றியதாகவும் மேலும் 60 பேர் குண்டுகளால் இடிபாடுகளுக்கு உள்ளாகிய கட்டடத்துக்குள் தொடர்ந்தும் இருப்பதாக உக்ரேன் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களனைவருமே இறந்திருப்பதாகவே தாம் ஊகிப்பதாக மீட்புப் படைச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்