புச்யாவில் போர்க்குற்றங்கள் பொய்ப்பிரச்சாரம் என்று கூறிப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியது ரஷ்யா.

உக்ரேன் தலைநகரின் புறநகர்கள் சிலவற்றைக் கைப்பற்றி அங்கிருந்து தலைநகரான கியவைத் தாக்கிவந்த ரஷ்யாவின் காலாட்படைகள் பின்வாங்கிவிட்டன. அதையடுத்து இர்பின், புச்யா ஆகிய அந்த நகரங்களுக்குச் சென்ற உக்ரேனிய இராணுவமும், பத்திரிகையாளர்களும் அங்கே பல போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதைக் கண்டு அவை ஊடகங்களில் வெளியாகின. ரஷ்யாவோ அவையெல்லாம் வெறும் பொய்ச் சித்தரிப்புக்களே என்று திட்டவட்டமாக மறுத்து அதுபற்றிப் பேச ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையைக் கூட்டியிருக்கிறது.

புச்யா நகரெங்கும் வீதிகளில் பல நாட்களுக்கு முன்னர் இறந்துபோனவர்களின் உடல்கள் காணப்பட்டன. அவர்களில் பெரும்பாலானோர் தப்பியோடிக்கொண்டிருந்த அல்லது வீதியில் நடமாடிய சாதாரண மனிதர்களே. கடையில் வாங்கிச்சென்ற பொருட்கள் கைகளிலிருக்கக் கொல்லப்பட்டவர்கள், மிதிவணியில் போகும்போது கொல்லப்பட்டவர்கள் போன்றவர்களின் பிணங்கள் வீதிகளில் கிடந்தன. அத்துடன் கைகள் பின்னால் கட்டப்பட்டுச் சிலர் சுடப்பட்டிருக்கிறார்கள். முழுமையான குடும்பத்தினர் தமது வாகனங்களுக்குள் சுடப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார்கள். 280 பேர் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட குழியொன்றும் காணப்பட்டது.

நகரின் சாதாரண மக்கள் வாழும் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. எரிந்த சாதாரண வாகனங்கள் பலவற்றையும் வெளியாகிய படங்களில் காணமுடிகிறது. புச்யா நகரில் மட்டுமன்றி ரஷ்ய இராணுவம் தாக்கிக் கைப்பற்றிவிட்டுப் பின்வாங்கிய மற்றைய நகரங்களிலும் கொலை, கொள்ளை, கூட்டுக் கற்பழிப்புக்கள் நடந்திருப்பதாகவும் அவற்றுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.  

“சில படங்களும், விபரிப்புக்களும் மட்டுமே நாட்டோ அமைப்புக்கும், மேற்கு நாடுகளுக்கும் போதுமானவை. உடனடியாக அவர்கள் எங்கள் நாட்டை மோசமாக விபரிக்கிறார்கள்,” என்று மரியா சக்கரோவா என்ற வெளிவிவகார அமைச்சின் ஊடகத் தொடர்பாளர் சாடியிருக்கிறார்.

“இப்படியான குற்றச்சாட்டுக்களும், கிளர்ச்சியைத் தூண்டும் கூற்றுக்களும் சர்வதேச அமைதிக்கும், ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பவை. எனவேதான் நாம் உடனடியாக ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையைக் கூட்டியிருக்கிறோம் என்றார் வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லவ்ரோவ்.

 ரஷ்யாவின் மறுதலிப்பை எதிர்கொள்ள நியூ யோர்க் போஸ் பத்திரிகை கடந்த மூன்று வாரங்களாக அவ்விடங்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டிருக்கிறது. அப்படங்களில் குறிப்பிட்ட வீதிகளில், அதே பிணங்கள் பல நாட்களாகக் கிடப்பதைக் காணமுடிகிறது. 

உலகத் தலைவர்கள் பலரும் ரஷ்யாவின் போர்க்குற்றங்களைக் கடுமையாகக் கண்டித்து வருகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யா மீது மேலும் பலமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி “புத்தின் ஒரு போர்க்குற்றவாளி என்றும் நீதிமன்றத்தில் அவரை நிறுத்துவதற்கு வேண்டிய ஆதாரங்களையும், ஆவணங்களையும் சேர்த்து வருவதாகவும்,” குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *