நல்லாசான்

அறிவின் வடிவாய் இருப்பவராம்
அன்னை அன்பை ஒத்தவராம்
இறைக்கு நிகராய்த் திகழ்பவராம்
என்றும் மனதில் நிறைந்தவராம்
குறையைக் களையும் வித்தகராம்
கூர்ந்த ஞானம் கொண்டவராம்
நெறியை ஊட்டி வளர்ப்பவராம்
நேசம் நிறைந்த ஆசானாம்!

இருளை நீக்கும் கதிர்போல
இதயத் தெளிவைக் கொடுப்பவராம்
அருளை வழங்கும் இறைபோல
அறிவை நித்தம் வழங்கிடுவார்
மருண்டே இருக்கும் சிறுவர்க்கு
வண்ணப் படத்தில் கதைகூறி
வரவை நாளும் கூட்டிடுவார்
மனதின் ஐயம் போக்கிடுவார்!

நாளும் மாறும் உலகினிலே
நடப்பை யறியச் செய்திடுவார்
ஆளும் அறிவும் உயர்ந்திடவே
ஆக்கம் பலவும் வித்திடுவார்
கோளின் சுழற்சி நகர்வுகளைக்
குறும்ப டவழிக் காட்டிடுவார்
வேளாண் துறையை அறிந்திடவே
வெளியே செயலில் காட்டிடுவார்!

பள்ளி நேரம் முடிந்தாலும்
பாடம் நடத்தி ஓய்ந்தாலும்
அள்ளி வந்த ஏடுகளை
அன்றே திருத்தி முடித்திடுவார்
வெள்ளி முளைக்கும் வேளையிலே
விழித்தே கடன்கள் முடித்திடுவார்
துள்ளி யோடும் காளையைப்போல்
துடிப்பாய் நாளும் இயங்கிடுவார்!

மனத்தின் குறையைக் காட்டாமல்
மகிழ்வாய்ப் பாடம் புகட்டிடுவார்
இனத்தின் உயர்வை முன்நிறுத்தி
ஏற்றம் காணச் செய்திடுவார்
கனக்கும் வேலைப் பளுவினிலும்
கட்சி தமாகச் செயல்முடிப்பார்
சினந்தே அவரைப் பழித்துவிட்டால்
சீராய் வாழ்வும் அமையாதே!

எழுதுவது : சி.விஜயலட்சுமி கோவிந், மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *