பாவரசின் பாட்டு…

கற்றிடுவாய்! கற்றலினால் கண்டிடுவாய் மாண்பினை!
பெற்றிடுவாய் வாழ்வில் பெரிது!

விதைத்த வினைகள் விளைந்தே திரும்பும்!
வதைக்கும் செயலை வகுத்து!

உறங்கிக் கிடப்போர் உயர்வை இழப்பார்!
மறந்திடுவார் வாழ்வின் மதிப்பு!

அழுக்கு தனையே அகமென கொண்டோர்
இழுக்கை அடைவார் இகழ்ந்து!

நெறியை மறந்தோர் நிலைத்தல் அரிது!
அறிஞர் உரைத்தார் அன்று!

சிந்தி செயல்படு சீர்கொள்ளு மாற்றங்கள்
வந்தேதான் காண்பாய் வளம்!

புதுக்கருத்தை சொல்லும் புதுநூல்கள் செய்து
பொதுவுடைமை தன்னை புகுத்து!

துள்ளிக் குதித்து துரத்திடு சோர்வினை!
வெள்ளிபோல் தோன்று வெகுண்டு!

சிலந்தி வலையை சிறையென எண்ணி
புலம்பியே சாகும் புழு!

நீண்ட விடவிடச் சீற்றம் அதிகரித்து
தூண்டிலில் சிக்கும் துடித்து!

அறிவினில் செய்திடுவாய் ஆக்கம் தனையே
பிறப்பில் அதுவே பெரிது!

முகவ ரியற்று முகத்தை மறைத்து
புகலுமாய் பொய்தான் புழு!

விரிக்கும் வலைக்குள் விழுந்து தவிக்கும்
திரிபுகள் கொண்ட திமிர்!

அழுக்கென வாழ்ந்து அசுத்தம் அடைதல்
இழுக்கு பிறப்பின் இயல்பு!

நோக்கம் அறியார் நுணுக்கம் அறிந்திடார் போக்கிலி என்றே புகர்!

பாதகம் செய்வோர்க்கு பாவரசின் பாட்டுதான்
வேதனை செய்திடும் வீறு!

ஆட்டம் முடித்திட ஆணவம் போக்கிட
பாட்டுகள் உண்டென்றே பாடு!

பிறரை இழந்து பிழைகள் புரிவோர்
இறந்தும் அடைவார் இழுக்கு!

பொய்மை புரட்டு புனைவால் பிழைப்போரை வாய்மையால் செய்வாய் வதம்!

புழுக்கம் அடைந்து புலம்பி அழுதல்
இழுக்கு மனிதர் இயல்பு!

எழுதுவது ; பாரதிசுகுமாரன்