சுமைதாங்கி
கட்டியவனோ குடிகாரன்,
எட்டி நின்றன உறவுகள்,
சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டாள்,
குடித்து குடித்து மாய்ந்து விட்டான்!
எண்ணிய மண வாழ்க்கை,
கண்முன்னே கலைய கண்டாள்,
தவமாய் பெற்ற பிள்ளை,
தவிக்க விட மனமில்லை!
தடுமாறி நின்றாளவள்,
தடம் மாற நினையாதவள்,
தலைவன் இல்லா பாவையானாள், தலைச் சுமையை ஏற்கலானாள்!
சோதனைகள் கொஞ்சமில்லை,
வேதனைகள் பஞ்சமில்லை,
சகித்து வாழ தொடங்கினாள்,
சாவை ஏற்க விரும்பாதவள்!
விரலில் பட்ட புண் ஆறிவிடும்,
குரலில் சுட்ட புண் ஆறாதே,
மௌன மொழி தாங்கி நின்ற,
சுமைதாங்கி இவளானாள்!
வறுமை இருளகற்ற,
வளமை ஒளியேற்ற,
தோற்றம் மாறி நின்றாள்,
ஏற்றம் இவள் கண்டாள்!!
செல்விமிக்கேல்
கூட்டப்புளி