பிரான்ஸ் நகரமொன்று உடலை மறைக்கும் உடைகளுடன் பொது நீச்சல் தலங்களில் நீந்த அனுமதித்திருக்கிறது.
சமீப வருடங்களில் பிரான்ஸில் பரவலாக எழுந்திருக்கும், “முஸ்லீம்களுக்காகத் தனியான சட்டங்களா?” என்ற கேள்வி மீண்டும் விவாத முனைக்கு வந்திருக்கிறது. காரணம் கிரெனோபிள் என்ற நகரத்தின் நகரசபை உறுப்பினர்கள் தமது பிராந்தியத்தில் பெண்கள் புர்க்கினி எனப்படும் உடலை முழுசாக மறைக்கும் உடைகளுடன் பொது நீச்சலிடங்களில் நீந்தலாம் என்று அனுமதி கொடுத்திருப்பதாகும்.
“இது எமது பொதுவான சமூக விதிகளுக்குப் புறம்பானதாகும். இந்த முடிவு சமூகத்தை வேண்டுமென்றே பிரச்சனைக்குள் இழுப்பது போன்றது,” என்று கிரனோபிள் நகரசபையைச் சாடியிருக்கிறார் நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின்.
கிரனோபிள் நகரசபையின் முடிவுக்கு நாட்டின் பெண்ணுரிமை அமைப்புக்களின் ஆசீர்வாதமும் கிடைத்திருக்கிறது.காரணம் அங்கே எழுப்பப்பட்ட கேள்வி “முழு உடலை மறைப்பது,” பற்றியதல்ல என்கிறார் நகரசபைத் தலைவர். “இப்படியான சட்டத்தையே நாம் விரும்புகிறோம்,” என்கிறார்கள் பெண்ணுரிமை அமைப்புக்கள்.
கிரனோபிள் நகரசபையின் முடிவுப்படி “எவரும் எந்த விதமான உடையுடனும் நீந்தலாம்.” அதன் அர்த்தம் பொது இடங்களில் பெண்கள் ஆண்களைப் போலவே மேலாடையின்றித் திறந்த மார்புடன் நீந்துவதும் இந்த விதியினால் அனுமதிக்கப்படுகிறது.
“பொது இடங்களில் இன\மத அடையாளங்கள் தடை,” என்கிறது பிரென்ச் சட்டம். புர்க்கினி என்பது முஸ்லீம்களின் மத அடையாளமாகக் கருதப்படுவதால் அதைத் தடை செய்யவேண்டுமென்று ஒரு சாரார் வாதாடுகிறார்கள். கிரனோபிள் நகரம் இருக்கும் பிராந்தியத்தின் சபைத் தலைமை இதுபற்றி, “கிரனோபிள் தனது முடிவை மாற்றி புர்க்கினியைத் தடை செய்யாவிட்டால் அவர்களுக்கான பிராந்திய அரசின் மான்யம் நிறுத்தப்படும்,” என்று எச்சரித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்