முள்ளிவாய்க்கால் தரும் உறுதி

முள்ளிவாய்க்கால் இன்னுமின்னும் செவ்வண் ணத்தில்
—மூழ்கித்தான் கிடக்கிறது துயரைத் தாங்கி
வெள்ளமாகக் கண்ணீர்தாம் பாய்ந்த போதும்
—வேதனைகள் போகவில்லை நினைவை விட்டு !
கள்ளமன அரிதார முகங்க ளாலே
—கருகிட்ட துர்நாற்றம் வீசு தங்கே
வெள்ளைநிறக் கொடிபிடித்தும் சுட்டுக் கொன்ற
—வெடிச்சத்தம் ஒலிக்கிறது காதுக் குள்ளே !

ஆண்டுகள்தாம் சென்றாலும் அவல மாக
—அழுதகுரல் எதிரொலியாய் மீண்டும் மீண்டும்
மாண்டவர்தம் உடல்களினை உரமாய்க் கொண்டு
—மண்பிளந்த புற்களிலும் குருதி வாசம் !
பாண்டவர்க்கு எழுப்பிட்ட அரக்கு வீடாய்ப்
—பற்றியத்தீ விழுங்கியது தமிழி னத்தை
தீண்டாமை கடைபிடித்த உலகத் தாரால்
—தீக்கிரையாய் மனிதமான அடையா ளங்கள் !

வேலிக்குள் அடைத்தாலும் அந்த மண்ணின்
—விளைச்சலாக வளர்ந்துளது தாய்மண் வேட்கை
கூலியினைப் பெற்றன்று கூட்டாய்ச் சேர்ந்து
—கும்மாளம் போட்டவர்கள் மாய்ந்து போனார் !
போலிகளும் காட்டிகளும் போயொ ழிந்தார்
—போகவில்லை புலிவீரம் தோள்கள் விட்டு
தாலிகளை அறுத்தவர்கள் தலைகள் வீழும்
—தகதகக்கும் புதுவிடியல் கனவு வெல்லும் !

எழுதுவது : பாவலர் கருமலைத்தமிழாழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *