“எங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பது ஆபத்தானது,” என்று டிரான்ஸ்னிஸ்திரியா எச்சரித்தது.
தம்மைத் தனிக் குடியரசாகப் பிரகடனம் செய்துகொண்டிருக்கும் டிரான்ஸ்னிஸ்திரியாவின் ஜனாதிபதி வடிம் கிராஸ்னொஸெல்ஸ்கி, “பிரிட்னெஸ்த்ரோவியா ஒரு தனிமனிதர்களுடைய உரிமைகளைக் கௌரவித்துப் பாதுகாக்கும் ஒரு குடியரசு. தளம்பாமல் இயங்கிவரும் எமது நாட்டை யாராவது ஆக்கிரமிக்க நினைத்தால் அது அவர்களுக்கு ஆபத்தாக முடியும்,” என்று எச்சரித்திருக்கிறார். மோல்டோவாவின் ஒரு பகுதியாகக் கருதப்படும் உக்ரேனுக்கும், மோல்டோவாவுக்கு இடையேயிருக்கும் டிரான்ஸ்னிஸ்திரியா, “மோல்டோவாவின் பிரிட்னெஸ்த்ரோவியக் குடியரசு” என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரஷ்ய ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும் டிரான்ஸ்னிஸ்திரியாவில் ரஷ்யா 1,600 இராணுவ வீரர்களை வைத்திருக்கிறது. அவர்களில் ஒரு பகுதியினர் “அமைதி பேணும் படையினர்” என்று குறிப்பிடப்படுகிறார்கள். அப்பிராந்தியத்தை உக்ரேனின் மேற்குப் பகுதியைத் தாக்குவதற்காக ரஷ்யா தயார் செய்திருப்பதாகக் குறிப்பிடப்படுவதை ஜனாதிபதி வடிம் கிராஸ்னொஸெல்ஸ்கி கடுமையாக மறுக்கிறார்.
“அப்படியொரு எண்ணமோ, திட்டமோ எங்களிடம் இல்லை. எங்கள் நாடு சுதந்திரமாக எங்களுக்கான பாதுகாப்பு இராணுவத்தைக் குறிப்பிட்ட இடங்களில் நிலையாகக் கொண்டுள்ளது,” என்கிறார் வடிம் கிராஸ்னொஸெல்ஸ்கி. மார்ச் மாதமளவில் உக்ரேனிய இராணுவமும் அதை ஒத்துக்கொண்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்