ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய நிகழ்வுகளும் மே மாதமும்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்காலச் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து  இவ்வாரம் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அந்த கொலை வழக்குடன் தொடர்புடைய நிகழ்வுகள் மற்றும்  ஆட்களுக்கும் மே மாதத்துக்கும் இடையிலான ‘ விசேட தற்செயல் நேர்வுக்கு ‘ இன்னுமொரு இணைப்பாக வந்துசேர்ந்திருக்கிறது.

    ராஜீவ் காந்தியும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட 15 பேரும் சென்னைக்கு அண்மையாகவுள்ள ஸ்ரீபெரம்புதூரில் ‘ மனிதக் குண்டினால்’ கொல்லப்பட்டது 1991 மே 21 திகதியாகும்.

  சரியாக ஒரு வருடம் கழித்து 1992 மே 20 விசேட விசாரணைக்குழு பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்பு (தடா) சட்டத்தின் (இந்த சட்டம் பிறகு 1995 ஆம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டது) கீழ் அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

   அந்த குற்றப்பத்திரிகை   பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும்  இலங்கை — இந்திய சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட 1987 ஜூலை 29 தொடக்கம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட 1991 மே 21 வரையான நிகழ்வுகளை வரிசைப்படுத்தியிருந்தது.

  வழக்கில்  41 பேர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. அவர்களில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட மூவர் தலைமறைவாக இருந்தவர்களாகவும் 15 பேர் இறந்துபோனவர்களாகவும் குறிப்பிடப்பட்டனர்.பல்வேறு சட்டங்களின் கீழான குற்றச்செயல்களுக்காக 29 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது.

    விசேட நீதிமன்றத்தினால்  1998 ஜனவரியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் நான்கு பேர் ( நளினி, சாந்தன்,முருகன், பேரறிவாளன்) மரணதண்டனையை உச்சநீதிமன்றம் 1999 மே 11 ஊர்ஜிதம் செய்தது.வேறு மூவர்(றொபேர்ட் பாயஸ்,ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ) மீதான மரணதண்டனையை ஆயுட்காலச்சிறைத் தண்டனையாகக் குறைத்த அந்த நீதிமன்றம் ஏனைய 19 பேரையும் விடுதலை செய்தது. 

பத்து வருடங்கள் கழித்து 2009 மே மாதத்தில் (25 வருடங்கள்  நீடித்த ) இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது. பிரபாகரன் இறந்துவிட்டார் என்று இலங்கை அரசாங்கம் 13   வருடங்களுக்கு முன்னர் ( 2009 மே 18) அறிவித்தது. இவ்வருடம் அதே தினத்தில் (2022  மே 18) பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

(தி இந்துவில் வெளிவந்த கட்டுரையின்மொழிமாற்றம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *