நீருக்காகத் தவித்த நிலையிலிருந்து நீரை ஏற்றுமதி செய்யும் நிலைமைக்கு மாறியிருக்கும் இஸ்ராயேல்.
ஒரு சுதந்திர நாடாக இஸ்ராயேல் பிறந்தபோது நாட்டிற்கு அரிதாக இருந்த மிகப்பெரிய இயற்கை வளம் நீர் ஆகும். நாட்டிலிருந்த நீர் நிலைகளைப் பாவித்து அவை படிப்படியாக நீர்மட்டத்தால் குறைந்து வந்த நிலை நாட்டின் நீர்ப்பற்றாக்குறைப் பிரச்சினையை மேலும் அதிகரித்தது. அந்த நிலைமையை எதிர்கொள்ள இஸ்ராயேல் எடுத்த முடிவு, நாட்டுத் தேவைக்காகக் கடலிலிருந்து எடுத்து உப்பை அகற்றிய நீரையே பாவிப்பது என்பதாகும்.
படுவேகமாகத் தனது மத்தியதரைக் கடல் பகுதியில் கடல் நீரை எடுத்து உப்பை அகற்றிக் குடிநீராக்கும் மையங்கள் ஐந்தைக் கட்டியெழுப்பியது இஸ்ராயேல். அதன் பலனாக நாட்டின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்தது. நாட்டிலிருக்கும் ஆறுகள், குளங்களிலிருந்து எடுத்துக் குடிநீர்ப் பாவனைக்குப் பாவிப்பது நிறுத்தப்பட்டது. அதையும் தாண்டி இஸ்ராயேல் ஜோர்டான் போன்ற நாடுகளுக்கு குடிநீரை ஏற்றுமதி செய்தும் வருகிறது.
தற்போது கடல்நீரைக் குடிநீராக்கும் ஆறாவது நிலையத்தை இஸ்ராயேல் தயாரித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வழியில் இதன் வெற்றிக்கதை போற்றப்பட்டாலும் இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் சூழல் பேணும் அமைப்பினர். கடல்நீர் சுத்திகரிக்கப்படும்போது சேதாரமாகப் பெருமளவில் உப்பு உண்டாக்கப்படுகிறது. கடலில் வீசப்படும் அந்த எச்சப்பொருளின் பாதிப்பு காலநிலை மாற்றத்தை மேலும் மோசமாக்கலாம் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்