மோசமாகியிருக்கும் வாழ்க்கை நிலையை எதிர்த்து லிபியர்கள் நாட்டின் பாராளுமன்றத்துள் புகுந்து ஆர்ப்பாட்டம்.
லிபியாவின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் மின்சாரமின்மை உட்பட்ட தினசரி வாழ்க்கையின் மோசமான நிலைமையால் நாடெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெள்ளியன்று டுபுரூக் நகரிலிருக்கும் பாராளுமன்றக் கட்டடங்களுக்கு உள்ளே புகுந்த ஒரு ஆர்ப்பாட்டக் கூட்டத்தினர் அங்கே சேதங்களை விளைவித்தனர்.
பாராளுமன்றம் நாட்டின் தலை நகரான திரிபோலியிலிருந்து பல நூறு கி.மீ தூரத்திலேயே இருக்கிறது. லிபியாவின் ஊடகங்களும், சமூகவலைத்தளங்களிலும் வெளிவந்த படங்களும் விபரங்களும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த ஆர்ப்பாட்ட அணியினரை எதிர்கொள்ள முடியாமல் பாதுகாப்பு வீரர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதை விபரித்தன. உள்ளே நுழைந்த அவர்கள் கட்டடத்தின் உள்ளே பெரும் சேதங்களை விளைவித்ததுடன் தீயூட்டியதையும் காணக்கூடியதாக இருந்தது.
நாட்டின் அரசியலில் பல குழுக்களும் எதிரெதிராக அதிகார மையங்களை நடத்துகின்றன. இரண்டு குழுவினர் தனித்தனியாகத் தாமே நாட்டின் அரசாங்கத்தை நடத்துவதாகக் குறிப்பிடுகிறார்கள். பாராளுமன்றத்தில் அதிகாரத்திலிருக்கும் குழுவினருக்கு எதிராக திரிபோலியில் இன்னொரு அணியினர் ஆட்சி நடத்துகிறார்கள்.
ஐ.நா-வால் லிபியாவின் அரசியல் எதிரிகளிடையே நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த டிசம்பரில் நடக்கவேண்டிய அந்தத் தேர்தல் அரசியல்வாதிகளின் இழுபறியால் நடக்கவில்லை. தமது ஒப்பந்தங்களின்படி எதுவும் நடக்காமல் தோல்வியடைந்திருப்பதாக ஐ.நா-வின் லிபியாவுக்கான பிரதிநிதிகள் குறிப்பிட்டார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்