பல தீவு நாடுகள் கடலுக்கடியிலான சுரங்கங்களில் கனிமவளம் தேடுவதை நிறுத்த விரும்புகின்றன.
ஐ.நா-வின் சமுத்திரங்கள் பற்றிய மாநாடு ஸ்பெய்னின் லிசபொன் நகரில் நடந்தேறியது. ஆரோக்கியமான சமுத்திர சூழல் பல பில்லியன் மக்களின் வாழ்வுக்கு அடிப்படையான தேவையாக இருக்கிறது. ஆனால், மனித நடவடிக்கைகளால் அழுக்காகிவரும் சமுத்திரங்களின் ஆரோக்கியம் படிப்படியாகக் குன்றி அது மனித வாழ்வுக்கு மட்டுமன்றி அதை நம்பியிருக்கும் விலங்குகள், தாவரங்களுக்கும் பல இடைஞ்சல்களை உண்டாக்கி வருகிறது. அதை எப்படியான நடவடிக்கைகளால் எதிர்கொள்வது என்பது பற்றிய கருத்துப்பரிமாறல்களின் பின்னர் மாநாட்டில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
பீட்டர் தொம்சன் என்ற ஐ.நா-வின் கடல் ஆரோக்கியத்துக்கான பிரத்தியேக பிரதிநிதி மா நாட்டில் பேசும்போது கடல்களின் மாசுபாடு பற்றிய விடயங்கள் எல்லாமே மோசமானவை அல்ல என்று குறிப்பிட்டார். உலகெங்கும் சமீபத்தில் இளவயதினரிடையே ஏற்பட்டிருக்கும் சுற்றுப்புற சூழல் பற்றிய அவதானத்தினால் அவர்கள் சமுத்திரங்களின் ஆரோக்கியம் பற்றியும் எடுத்துவரும் கவனத்தையும், நடவடிக்கைகளையும் அவர் பிரத்தியேகமாகச் சிலாகித்துப் பேசினார். அதே கவனத்தை உலக நாடுகளின் அரசுகளும், தொழில்துறையினரும், சமூகங்களும் எடுத்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
சமுத்திரங்களின் ஆரோக்கிய வாழ்வு பற்றிய இந்த இரண்டாவது மாநாட்டில் முக்கிய கவனத்தைப் பெற்ற ஒரு விடயம் ஆழமான கடலுக்குக் கீழே கனிம வளம் தேடி ஆரம்பிக்கப்படவிருக்கும் சுரங்கங்கள் பற்றியதாகும். காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்றான தொழில்நுட்ப மாற்றத்துக்காக வித்தியாசமான கனிமங்கள் சிலவற்றுக்கான தேவை பெருமளவில் அதிகரித்திருப்பதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
மெக்ஸிகோவுக்கும் ஹவாய்க்கும் இடையில் சர்வதேசக் கடலில் தொழில்நுட்ப மாற்றங்களுக்குப் பெரும் அவசியமான கனிமங்கள் ஆழ்கடலில் பெருமளவில் கிடக்கின்றன. வசதியுள்ள நாடுகளும் சர்வதேசப் பெரும் நிறுவனங்களும் அந்தக் கனிமப் பொருட்கள் மீது குறிவைத்தே ஆழ்கடல் சுரங்க வேட்டையில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கின்றன.
தீவுகளிலாலான பல நாடுகள் அப்படியான ஆழ்கடல்ச் சுரங்கங்கள் தோண்டலை நிறுத்திவிடும்படி மாநாட்டில் கோரிவருகின்றன. அப்படியான ஆழ்கடல் சுரங்கங்களினால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாற்றங்கள், வெளியேற்றப்படும் மிச்சப்பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் பற்றி தீவுகளிலான நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. காலநிலை மாற்றங்களின் பாதகமான விளைவுகளை முதலணியில் நின்று அனுபவித்து, அழிந்துவரும் நாடுகள் அவையே. பிஜி, பாலவ் போன்ற நாடுகள் அப்படியான ஆழ்கடல் சுரங்கங்கள் தோண்டுவதற்கு தற்காலிகத் தடையொன்றைச் சர்வதேச அளவில் கோரின.
அதே சமயம் உலகின் பல ஆராய்ச்சியாளர்களும் அதையே கோருகிறார்கள். வொல்வோ, பி.எம்.டபிள்யூ, கூகுள் போன்ற நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டி அப்படியான இடங்களிலிருந்து வரும் கனிமப்பொருட்களைப் பாவிப்பதில்லை என்று குறிப்பிடுகின்றன. சமுத்திரங்கள், கடல்களிலிருக்கும் இயற்கைவளங்களுக்கான ஐ.நா-வின் அதிகாரமானது இதுபற்றிய ஆராய்ச்சிகளிலும், பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்