மீண்டும் இத்தாலியில் அதிகரிக்கும் கொவிட் தொற்றுக்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை.
கடந்த சில நாட்களாக இத்தாலியில் தினசரி கொவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை 100,000 ஆகியிருக்கிறது. மருத்துவமனையில் அதற்காக அனுமதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 132,24 தொற்றுக்களும் 94 இறப்புக்களும் செவ்வாயன்று ஏற்பட்டிருக்கின்றன.
இந்தச் சமயத்தில் சனிக்கிழமையன்று ரோம் நகரின் அரங்கொன்றில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியொன்றில் சுமார் 70,000 பேர் பங்குபற்றவிருக்கிறார்கள். அதனால் தொற்று மேலும் அதிகமாகும் என்று எச்சரிக்கிறார்கள் நாட்டின் மருத்துவர்கள். பெப்ரவரி 2020 இல் நாட்டில் காணப்பட்ட முதலாவது கொவிட் தொற்றுக்குப் பின்னர் நடக்கவிருக்கும் மிகப்பெரும் கலை நிகழ்ச்சிக்கு எதிராக நாட்டில் ஓமெக்ரோன் 5 திரிபு தொற்றிவருகிறது.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்குச் சென்றிருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது. 51 ஆக ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்த அந்த எண்ணிக்கை 94 ஆகியிருக்கிறது. அவர்களில் 78 % பேர் 4 வயதுக்குக் குறைவானவர்களாகும்.
மருத்துவமனையில் கொவிட் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 விகிதமானோர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்களாகும். தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ளல் குறைந்திருப்பதால் 80 வயதுக்கு மேற்பட்டோர் அதை உடனடியாகப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. ஜனவரி 2022 இன் பின்னர் கொவிட் பாதித்து இறந்தவர்களில் பெரும்பாலானோர் + 80 க்கு மேற்பட்டோரே. அவர்களில் 43 % பேர் பெண்களாகும்.
67 % இத்தாலியர்கள் மூன்று தடுப்பூசிகளையும் போட்டிருக்க 2 % பேரே நான்காவது ஊசியையும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்