கோட்டாபாய புதனன்று ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு.
ஜூலை 9ம் திகதியன்று கொழும்பில் நடந்த வரலாறு காணாத “கோட்டா பதவி விலகு” ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களையடுத்து பிரதமர் ரணில் பதவி விலகினார். பாராளுமன்றக் கட்சித் தலைவர்களை ஒன்று கூட்டிய சபாநாயகர் மஹிந்த யாப அபேவர்த்தன மூலம் ஜனாதிபதி பதவியிலிருந்து புதனன்று தான் விலகிக்கொள்வதாக கோட்டாபாய ராஜபக்சே அறிவித்திருக்கிறார்.
பல மாதங்களாகவே ஜனாதிபதிக்கு எதிராக நாட்டின் வெவ்வேறு பாகங்களிலும் ஆரம்பித்த எதிர்ப்பு அமைப்புக்கள் சனிக் கிழமையன்று லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு ஜனாதிபதி வாசஸ்தலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றின. கோட்டாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவரை அதற்கு முன்னரேயே பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர். அந்த வாசஸ்தலத்தில் காவலிருந்த இராணுவம், பொலீசார் கண்ணீர்ப்புகை, பலமான எல்லைகளையெல்லாம் துச்சமாக ஒதுக்கிவிட்டு மாளிகைக்குள் நுழைந்த எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த எதிப்பாளர்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்து, கட்டில்களில் படுத்து, கண்ணாடிகளில் தங்களைப் பார்த்துக்கொண்ட சம்பவங்கள் உலகமெங்கும் ஊடகங்கள் மூலம் பரவின. பாதுகாப்பு அரண்களில் இருந்தவர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட சுமார் 45 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அன்னியச் செலாவணிக் கையிருப்புக் காலியாகியதால் ஏப்ரல் மாதத்தில் கட்டவேண்டியிருந்த 7 பில்லியன் டொலர் சர்வதேசக் கடனைக் கட்ட முடியாதென்று சிறீலங்கா அரசு கைவிரித்தது. அதையடுத்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் தவிக்கிறது நாடு. எரிபொருள், சமையல் வாயு இல்லாததால் பல கி.மீ நீள வரிசைகள் அதற்கான மையங்களில் காத்து நிற்கின்றன. மில்லியன்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டதால் உணவுத்தட்டுப்பாடும் நாடெங்கும் பரவியிருக்கிறது. தொடர்ந்து அடுத்த வாரமும் பாடசாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டு நிலைமையைச் சீர்செய்வதாக உறுதியளித்துப் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க அரசு செயற்பட இயலாமல் பாராளுமன்றம் அரசியல் போர்க்களமாகியிருக்கிறது. அதனால், சிறீலங்காவுக்கு அவசர உதவிகள் செய்வதை உலக நாடுகளும், கடன் நிறுவனங்களும் தவித்து வருகின்றன. செய்யப்படும் உதவிகளை அரசியல்வாதிகளும், அதிகாரத்திலிருப்பவர்களும் கையாடும் அபாயம் இருப்பதாகப் பல தரப்புகளிலும் தெரிவிக்கபட்டிருக்கிறது.
ஜனாதிபதி மாளிகை எதிர்ப்பாளர்களின் கையில் வீழ்ந்ததை அடுத்து இன்னொரு குழுவினர் ரணில் விக்கிரமசிங்காவின் தனிப்பட்ட வீட்டைக் கைப்பற்றி அதைத் தீக்கிரையாக்கினார்கள், வாகனங்களை உடைத்து நொறுக்கினார்கள். கோட்டாபாயவைப் போலவே ரணிலும் அடையாளம் தெரியாத இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்கள்.
நாட்டின் பொறுப்புக்களைக் கையேற்க சகல கட்சி ஆட்சி ஒன்றைத் தற்காலிகமாக அமைத்தவுடன் தான் ஒதுங்கிக் கொள்வதாக ரணில் தெரிவித்தார். தற்காலிக ஜனாதிபதியாகப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் அபேயவர்த்தன தற்காலிகமாகப் பதவியேற்பார். பாராளுமன்றம் கூடி ஒரு தற்காலிக ஜனாதிபதியைத் தெரிந்தெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்