மியான்மாரை ஆளும் இராணுவத்துக்கெதிராக ஆயுதப்போருக்கு வரும்படி நாட்டின் நிழல் அரசின் தலைமை அறைகூவல்.

நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளவிடாமல் பெப்ரவரியில் ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மார் இராணுவத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் மக்கள் ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவித்து வருவது தெரிந்ததே. ஆரம்பத்தில் மக்கள் பேரணிகளை அனுமதித்த இராணுவ அரசு படிப்படியாகத் தனது இரும்புக்கரங்களால் மக்களின் எதிர்ப்புக் கூட்டங்கள், பேரணிகளில் பங்குபற்றுகிறவர்களை தாக்கி ஓரளவு கட்டுப்பாட்டை நாட்டில் கொண்டுவந்துவிட்டது.

நடந்த தேர்தலில் ஏமாற்றுக்கள் நடந்ததாகக் குறிப்பிட்டு விரைவில் தேர்தல்கள் நடாத்துவதாகச் சொல்லி நாட்டை ஆண்டுவரும் இராணுவத் தலைமையின் பேச்சை நம்ப ஆட்சியிலிருந்தவர்கள் நம்பத் தயாராக இல்லை. வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்து வெளி டுகளில் வாழும் மியான்மார் மக்களின் ஆதரவைப் பெற்று இராணுவ அரசை வீழ்த்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. 

இராணுவ அரசை எதிர்த்துப் போராடும் மக்களை ஒன்றுசேரும்படி நிழல் அரசாங்கத் தலைவர்கள் அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். மியான்மாரின் நீண்ட காலமாகவே அடக்கப்பட்டு வந்திருக்கும்  பல சிறுபான்மை இனமக்களின் இயக்கங்களை அவர்கள் ஒன்றுசேர்த்திருப்பதாகத் தெரிகிறது. இராணுவத்தினரால் கைதுசெய்யப்படாமல் தப்பியோடிய முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களே அந்த நிழல் அரசாங்கத்தில் (National Unity Government) பங்குவகிக்கிறார்கள்.

சமூக வலைத் தளங்கள் மூலமாக மக்களை நோக்கி அவர்கள் விடுத்திருக்கும் அறைகூவலில் “மியான்மாரில் சுயாட்சிகள் கொண்ட மாநிலங்களாலான தேசிய அரசாங்கமொன்றை அமைக்க ஆயுதப் போரில் இறங்க ஆயத்தமாகுங்கள்,” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இராணுவத்தின் ஆட்சியை எதிர்ப்பவர்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்கும் ஆயுதப் போரில் தத்தம் பாகங்களில் ஈடுபடவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆயுதப் போருக்கான அறைகூவல் வெளியானதை அடுத்து நாட்டின் தலைநகரில் மக்கள் அலையாகச் சென்று கடைகளில் தம்மால் முடிந்தவைகளை வாங்கி வீடுகளில் தேக்கிக்கொள்ள ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. அப்படியான ஒரு எதிர்ப்பை எதிர்கொள்ள இராணுவ அரசு நாடெங்கும் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து ஸ்தம்பிக்கவைக்கலாம் என்று மக்கள் திகிலடைந்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *