உலகின் சனத்தொகை நவம்பர் 15 இல் 8 பில்லியன் பேராக அதிகரிக்கும்.

ஐ.நா-வின் கணிப்புகளின்படி இவ்வருடம் நவம்பர் 15 ம் திகதியன்று உலக மக்கள் எண்ணிக்கை 8 பில்லியனாகும். 2023 இல் உலகின் அதிக மக்கள் தொகையுள்ள நாடு என்ற இடத்தைச் சீனாவிடமிருந்து இந்தியா பறித்துக்கொள்ளும்.

“இந்த உலகின் வளங்கள் நாங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டியவை. அவற்றைப் பேணிப் பாதுகாப்பது எங்களின் கூட்டுறவுப் பொறுப்பு. தொழில் நுட்பங்கள், மருத்துவ முன்னேற்றங்களால் நாம் எமது ஆரோக்கியத்தின் தரத்தை உயர்த்திக்கொண்டதை எண்ணிப் போற்றவேண்டும்,” என்று இதுபற்றி ஐ.நா-வின் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டார்.

உலகின் சனத்தொகை வளர்ச்சி 1950 இன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மெதுவாகவே வளர்ச்சியடையும் அது 2030 இல் அது 8.5 பில்லியனாகவும், 2050 இல் 9.7 பில்லியனாகவும் உயரும். 2080 இல் 10.4 பில்லியன் பேராகும் உலகச் சனத்தொகை 2100 இல் அதே எண்ணிக்கையில் இருக்கும். 

வளரும் நாடுகள் பலவற்றில் சமீப ஆண்டுகளில் பிள்ளைப்பேறுகள் குறைந்திருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் ஆண்டுகளில் ஏற்படும் மக்கள் தொகை வளர்ச்சியின் பாதி எட்டு நாடுகளிலேயே இருக்கும். அவை கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தன்சானியா ஆகியவையாகும்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *