இந்த வாரத்தில் உலகின் சனத்தொகை 8, 000,000,000 ஆக உயர்கிறது.

நவம்பர் 15 ம் திகதியன்று உலகின் மக்கள் தொகை எட்டு பில்லியன் ஆக உயரும் என்று புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. ஏழு பில்லியன் ஆக இருந்த உலக மக்களின் எண்ணிக்கை எட்டு ஆக உயர 12 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. உலக மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகமானது படிப்படியாகக் கீழிறங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பற்றிய விபரங்களைக் கையாளும் அங்கமான UNFPA குறிப்பிடுகிறது.

மக்கள் தொகை அதிகரிப்பு பற்றிய புள்ளிவிபரங்களைக் கவனித்தால் 1964 ம் ஆண்டு உலக மக்களின் அதிகரிப்பு வருடாவருடம் 2.2 % ஆக இருந்தது. அதன் பின்பு குறைய ஆரம்பித்த அது தற்போது வருடத்துக்கு 1 விகிதத்தையும் விடக் குறைவாகவே அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் வருடங்களில் அந்த வேகம் மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

உலக மக்கள் தொகை, அதன் அதிகரிப்பு வேகம் எப்படியிருக்கிறது என்பதை விட முக்கியமானது அந்த மாற்றங்கள் உலகின் வெவ்வேறு பாகங்களில் எப்படி இருக்கின்றன என்பதும், வெவ்வேறு பிராந்தியங்களின் வாழும் மக்களின் வயதுகளில் இருக்கும் வித்தியாசங்களும் ஆகும். அந்த வித்தியாசங்கள் தான் உலக நாடுகளின் பொருளாதாரம், சுபீட்சம், வாழ்க்கைத்தரம், குடிவரவு, குடிபெயர்தல் போன்றவற்றை நிர்ணயிக்கின்றன.

முன்னர் உலக மக்களில் பெரும்பாலானோர் இள வயதுள்ளவர்களாக இருந்தார்கள். தற்போது ஆபிரிக்காவின் சஹாராவுக்குத் தெற்கேயுள்ள நாடுகளில் வாழும்  மக்களின் சராசரி வயது 17.6 ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழுபவர்களிடையே அது 44 வயது ஆகும். பிராந்தியங்களுக்கு இடையேயான மக்களின் சராசரி வயதுகளில் இத்தனை இடைவெளி என்றுமே இருந்ததில்லை.

60 விகிதமான மக்கள் வாழும் நாடுகளில் பிள்ளைப்பிறப்புகள் குறைவாக இருக்கின்றன. அது வரும் ஆண்டுகளில் மேலும் குறைந்துகொண்டே செல்லும் என்று கணிக்கப்படுகிறது. அதாவது அந்த நாடுகளில் முதியவர்களின் எண்ணிக்கை படிப்படியாக இளவயதனவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துச் செல்லும். அப்படியான நிலமையையில் நாடுகள் தமது மக்கள் ஆரோக்கிய சேவைகளைத் தரமானதாக வைத்திருப்பது சவாலாக மாறும். தமது நாடுகளின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நிதியை ஸ்திரமாக வளர்ப்பதும் கடினமானதாகவே இருக்கும். அப்படியான நிலையை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனை கேட்டுப் பல நாடுகள் UNFPA ஐ நாடி வருவதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *