ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரி ரஷ்யாவிடம் வாங்கும் எரிவாயுவை அதிகரிக்க விரும்புகிறது.
உக்ரேனுக்குள் ரஷ்யா ஆக்கிரமிக்க ஆரம்பித்த பின்னர் ஆஸ்திரியப் பிரதமருக்கு அடுத்ததாக மொஸ்கோவுக்குப் பயணிக்கவிருப்பவர் ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஷர்த்தோவாகும். அவரது விஜயத்தின் நோக்கம் ரஷ்யாவிடமிருந்து ஏற்கனவே கொள்வனவு செய்துவரும் எரிவாயுவின் அளவை அதிகரிப்பதாகும். ரஷ்ய எரிவாயுவைக் கொள்வனவு செய்வதை நிறுத்தும் நோக்குடன் ஒன்றியத்தின் நாடுகள் தமது எரிவாயுப் பாவிப்பை 15 விகிதத்தால் குறைக்கவேண்டும் என்று ஒன்றியத் தலைமை கேட்டுக்கொண்ட பின்னரே ஹங்கேரிய அமைச்சரின் விஜயம் பற்றிய செய்தி வெளியானது.
“தற்போது நிலவும் சர்வதேச நிலையில் ஹங்கேரிக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளும் வழிகளை ஒழுங்குசெய்துகொள்வதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். அதனாலேயே நான் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிக எரிவாயுக் கொள்வனவை நிச்சயப்படுத்திக்கொள்ளப் போகிறேன்,” என்கிறார் ஷர்த்தோ.
“நெருக்கடியாக இருக்கும் சர்வதேச நிலைமையில் எங்கள் மீது அழுத்தத்தைப் பிரயோக்கிக்க முயலும் சில சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நாம் ஹங்கேரியின் கொள்வனவு அதிகரிப்புப் பற்றி வேகமாக ஆலோசித்து முடிவெடுத்துள்ளோம்,” என்று ஹங்கேரியின் நோக்கம் பற்றி ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் பதிலளித்தார்.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவை நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 12 க்கு முழுமையாக அல்லது பகுதியாக எரிபொருளை வெட்டிவிட்டது ரஷ்யா. வரவிருக்கும் குளிர்காலத்தில் எரிபொருள் தேவைக்குக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் அதன் விலை சர்வதேச ரீதியில் அதிகரித்து வருகிறது.
ஹங்கேரியுடன் தமக்கு உள்ள நீண்டகாலக் கூட்டுறவை விஸ்தரிக்க விரும்புவதாகவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதனால் ஹங்கேரிய அமைச்சரின் விஜயத்தின் போது ஹங்கேரியில் வாழும் ரஷ்யச் சிறுபான்மையினரின் நிலைமை பற்றியும், உக்ரேனில் நடந்துவரும் “பிரத்தியேக நடவடிக்கை” பற்றியும் ஆலோசனை நடக்கும் என்கிறார் லவ்ரோவ்.
சாள்ஸ் ஜெ. போமன்