ரஷ்யா தனது எரிவாயுக்குளாயின் கழுத்தை நெரிக்க, ஜேர்மனி இருட்டை அணைக்கிறது.
ஜேர்மனியின் நகரங்கள் ஒவ்வொன்றாகத் தமது மின்சாரப் பாவிப்பைக் குறைப்பதன் மூலம் ரஷ்யாவின் எரிவாயுவைப் பாவிப்பதைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவ்வாரத்தில் பல நகரங்கள் தமது முக்கிய கட்டடங்களின் மீது இரவில் வெளிச்சம் போடுவதை நிறுத்தி, பொதுக் கட்டடங்களுக்குள் கோடை முடியும் வரை வெப்பநிலையைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. உக்ரேன் போருக்கு முன்னர் தனக்குத் தேவையான எரிவாயுவின் பாதியை ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்து வந்த ஜேர்மனி இப்போது கால் பங்கையே அங்கிருந்து பெற்று வருகிறது.
ஜேர்மனியின் வடமேற்கிலிருக்கும் ஹனோவர் நகரமே முதலாவதாகத் தனது எரிசக்தி சேமிக்கும் திட்டங்களை அறிவித்து, அமுல்படுத்தியது. நகரில் அரசின் அதிகார கட்டடங்களில் சுடுநீரை நிறுத்துதல், ஒக்டோபர் 1 ம் திகதி வரை கட்டடத்துக்குள் வெப்பமாக்குதலை நிறுத்துதல், இரவில் பல கட்டடங்களுக்கு மீது பாய்ச்சப்படும் மின்சாரத்தை நிறுத்துதல் போன்றவற்றை நகரின் ஆளுனர் அறிவித்தார்.
“எரிவாயுவைக் குளிர்காலத்துக்காகச் சேமிக்கும் நடவடிக்கைகளை நாம்தான் எடுக்கவேண்டும். தவிர்க்கப்படும் ஒவ்வொரு கிலோவாட் நிமிடமும் எங்கள் எரிவாயுச் சேமிப்புக்கு நல்லது,” என்கிறார் ஆளுனர் பெலிட் ஒனாய்.
பெர்லின் நகரம் தனது 200 பொதுக்கட்டடங்களின் மீது இரவுகளில் ஒளிரவிடப்படும் 1,400 விளக்குகள் அணைக்கிறது. போஸ்ட்டாம், நுன்பெர்க் உட்பட பல பெரிய ஜேர்மனிய நகரங்களும் தமது பங்குக்கு எரிசக்தியைச் சேமிக்கும் நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்