தனது புனிதமான பசுக்களை ஒவ்வொன்றாக காவு கொடுத்து வருகிறது ஜெர்மனி!

ரஷ்யா தனது உக்ரேன் ஆரம்பிக்க ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்யாவுடன் ஜெர்மனியை இணைத்திருந்த புதிய எரிவாயுக் குளாயை மூடுவதைப் பற்றிப் பேசவே மறுத்து வந்த நாடு ஜெர்மனி. செவ்வாய்க் கிழமையன்று உக்ரேனுக்குத் தன் தயாரிப்பான விமானத்தைச் சுட்டு வீழ்த்தக்கூடிய நவீன ரகப் போர் வாகனங்கள் 50 ஐக் கொடுக்க உறுதியளித்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமான வர்த்தக, கலாச்சார உறவுகளை வளர்த்துக்கொண்ட நாடு ஜெர்மனி எனலாம். ரஷ்யா கடந்த வருடங்களில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் வெவ்வேறு அளவில் ஆக்கிரமிப்புக்களைச் செய்தபோதெல்லாம் அமெரிக்காவோ, ஐரோப்பாவோ அதன் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் தடுத்து வந்தது ஜெர்மனி.

உக்ரேனுக்குள் ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பித்த கட்டத்தில் தனது சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோ, சக நாட்டோ நாடுகளோ கேட்டுக்கொண்டும் கூட ஜெர்மனிய அரசு உக்ரேனுக்கு ஆயுதங்களைக் கொடுக்க மறுத்துவிட்டது. தலைக்கவசங்கள் சில ஆயிரத்தை அனுப்பி ஏளனமான விமர்சனங்களை எதிர்கொண்டது. பொதுவாகவே ஜேர்மனிய அரசுகள் ரஷ்யாவுடன் மென்மையான உறவையே பேணினாலும், தற்போது ஆட்சியிலிருக்கும் அரச கூட்டணியின் முக்கிய கட்சியான சோஷியல் டெமொகிரடிக் கட்சியின் பல தலைவர்களும் ரஷ்யாவுடனும் புத்தினுடனும் நெருங்கி உறவாடியவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

அந்தக் காரணத்தினாலோ என்னவோ தற்போதைய பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸ் கடந்த வாரம்வரை கூட உக்ரேன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய முக்கிய ஆயுதங்கள் எதையுமே கொடுக்க மறுத்து வந்தார். ஆனால், ஆட்சிக் கூட்டணியிலிருக்கும் சகாக்கள் இருவரும், எதிர்க்கட்சிகளும் பிரதமரின் கட்சியினரின் மீது கடுமையான நிர்ப்பந்தத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். 

ஒலொவ் ஷொல்ட்ஸின் கட்சி உக்ரேனுக்கு முக்கிய ஆயுதங்களைக் கொடுக்க மறுத்தால் தாம் பாராளுமன்றத்தில் அப்படியான ஆயுதங்களை உக்ரேனுக்குக் கொடுக்கவேண்டுமென்ற மசோதாவைக் கொண்டுவர எதிர்க்கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். அப்படியொரு சந்தர்ப்பத்தில் ஷொல்ட்ஸுடன் ஆளும் சக கட்சியினரே அதை ஆதரித்திருப்பார்கள். அப்படியொரு நிலைமையைத் தடுக்கவே தமது தயாரிப்பான விமானங்களைத் தாக்கும் யெபார்ட் போர் வாகனங்களை உக்ரேனுக்குக் கொடுக்க ஒத்துக்கொண்டிருக்கிறார். அதற்கான குண்டுகள் பிரேசிலி தயாரிக்கப்பட்டவை.

ஜெர்மனியின் தொழில்நுட்பத் திறமையைக் காட்டும் யெபார்ட் வாகனங்கள் வித்தியாசமானவை, பாவிப்பதற்குக் கடுமையானவை. எனவே, அவற்றை இயக்குவதற்கான பயிற்சியையும் ஜேர்மனியிலேயே உக்ரேன் இராணுவத்தினருக்குக் கொடுக்க ஜேர்மனியப் பாதுகாப்பு அமைச்சு முன்வந்திருக்கிறது. அதற்கான பயிற்சிகள் கொடுத்துப் பாவனைக்குத் தயார் செய்ய சுமார் 2 வாரங்கள் முதல் ஒரு மாதமாகலாம் என்று கருதப்படுகிறது.

பல நாடுகளும் உக்ரேனுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதாக உறுதி கூறியிருக்கும் இதே சமயத்தில் உக்ரேனுக்குள் வரும் ஆயுதங்களைக் காவிவரும் போக்குவரத்துக்களும் தமது தாக்குதலுக்கு உள்ளாகும் என்று எச்சரித்திருக்கிறார் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *