ஜெர்மனி அடுத்துவரும் நாட்களில் ரஷ்யாவிடமிருந்து பெற்றோல் வாங்குவதை நிறுத்திவிடக்கூடும்!

உக்ரேனுக்குள் ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பிக்கும்போது ஜெர்மனி தனது பெற்றோல் பாவிப்பில் 35 % விகிதத்துக்கு ரஷ்யாவில் தங்கியிருந்தது. அதைப் படிப்படியாகக் குறைத்து இவ்வருட இறுதியில் முழுவதுமாகவே ரஷ்யாவிலிருந்து பெற்றோல் வாங்குவதை நிறுத்துவதாக ஜெர்மனி திட்டமிட்டது. 12 % பெற்றோல் தொடர்ந்தும் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படுகிறது. 

தற்போதைய நிலைமையில் ரஷ்யாவிலிருந்து நேரடியாகக் குளாய் மூலமாக ஒரேயொரு சுத்திகரிப்பு நிலையத்துக்கு மட்டும் வருகிரது. Schwedt என்ற நகரிலிருக்கும் அந்தச் சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் ரொஸ்னெவ்ட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகிறது. அதற்கு மாற்றாக வேறு இடத்திலிருந்து பெற்றோல் வரவிருக்கும் நாட்களில் கிடைக்கும் என்று ஜெர்மன் வர்த்தக அமைச்சர் ரொபெர்ட் ஹாபக் தெரிவித்திருக்கிறார்.

ஜெர்மனியில் பொது மக்கள் அபிப்பிராயம் நாடு முழுவதுமாக ரஷ்யாவின் எரிசக்திக் கொள்வனவை நிறுத்துவதை ஆதரிக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஒன்றுகூடி அரசு அந்த முடிவை உடனடியாக எடுக்கும்படி கோரி வருகிறார்கள். அரசு தனது கணிப்பில் அப்படியான ஒரு முடிவு நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவில் தாக்கும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், பல ஆராய்ச்சியாளர்களும் அரசு குறிப்பிடுவது போன்ற பெரும் அதிர்ச்சியொன்றும் பொருளாதாரத்துக்கு ஏற்படப்போவதில்லை என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

பொது மக்கள் அபிப்பிராயத்தின் விளைவால் கூட்டணி அரசு தான் முன்னர் அறிவித்ததை விட அதிவேகமாகவே ரஷ்ய எரிபொருள் வாங்குதலை நிறுத்தச் சகல ஏற்பாடுகளையும் செய்யவேண்டியிருக்கிறது. அதையே அமைச்சர் பெற்றோல் கொள்வனவு நிறுத்தலைப் பற்றிப் பேசும்போது சுட்டிக் காட்டி, “இவ்வருட இறுதியில் நாம் ரஷ்யாவிலிருந்து பெற்றோல் வாங்குவதை நிறுத்திவிடலாம் என்று எதிர்பார்த்ததை விட வேகமாக வரும் நாட்களிலேயே அதைச் செய்துவிடலாம் என்று நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *