இறைச்சி வெட்டுமிடங்களில் கண்காணிப்புக் காமரா பொருத்தவேண்டும் என்பது ஸ்பெய்னில் புதிய சட்டம்.
இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளை அச்சமயத்தில் மோசமாகக் கையாள்வது பற்றிய செய்திகள் நீண்டகாலமாக வெளிவந்தன. விலங்குகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டுக் கொல்லப்படினும் அவைகளைச் சரியான முறையில் பேணவேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஸ்பெய்ன் தனது நாட்டின் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டும் மையங்களில் காமராக்களைப் பொருத்திக் கண்காணிக்கவேண்டும் என்று அறிவித்திருக்கிறது.
“இந்தப் புதிய சட்ட நடவடிக்கையின் மூலம் நாம் ஸ்பெய்னை விலங்குகளை நன்முறையில் பேணும் நாடாக முன்நிறுத்துகிறோம். இறைச்சிக்கான விலங்குகளைக் கையாளும் சகல கட்டங்களிலும் அதைக் கண்காணிப்பதன் மூலம் பாவனையாளருக்குக் கிடைக்கும் இறைச்சியின் தரமும் உறுதிப்படுத்தப்படுகிறது,” நாட்டின் கொள்வனவாளர்கள் நல அமைச்சர் அல்பர்ட்டோ கர்ஸோன் தெரிவித்தார்.
ஸ்பெய்னின் இந்த நடவடிக்கை ஏற்கனவே இறைச்சித் தயாரிப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதை அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக நாட்டின் பாராளுமன்றத்தில் அது முன்வைக்கப்பட்டபின் இயங்க ஆரம்பிக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்