கென்யாத் தேர்தலில் வில்லியம் ரூட்டோவே வென்றார் என்றது நாட்டின் உயர் நீதிமன்றம்.
ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் கென்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவை ஏற்க, அதில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மறுத்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதால் அதுபற்றிய விசாரணை நடத்தப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் முடிவு வில்லியம் ரூட்டோ வெற்றிபெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
கிழக்கு ஆபிரிக்க நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது ஜனநாயகம் ஓரளவுக்காவது செயற்பட்டு நாடு என்று கென்யா குறிப்பிடப்படுகிறது. அங்கே இதற்கு முன்னர் நடந்த தேர்தல் முடிவுகளின் பின்னர் வன்முறைகள் ஏற்பட்டுப் பலர் மடிந்திருக்கிறார்கள். இந்த முறை தேர்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து அதன் பின்னரும் நிலைமை ஓரளவு அமைதியாகவே இருந்து வருகிறது.
தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்ட ரைலா ஒடிங்கா நாட்டின் தேர்தல் ஆணையத்தின் நிர்வாகிகள் ஒருமுகமாகத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாததைச் சுட்டிக்காட்டியிருந்தார். வாக்குகளை எண்ணும் இயந்திரத்துக்குள் வெளியிலிருந்து இடையூறு செய்யப்பட்டு எண்ணிக்கைகள் மாற்றப்பட்டன, 140,000 வாக்குகள் எண்ணப்படாமல் ஒதுக்கப்பட்டன போன்றவற்றை முன்வைத்து ஒடிங்கா மேன்முறையீடு செய்திருந்தார்.
ஒடிங்காவின் குற்றச்சாட்டுகளை விசாரித்ததில் அவையேதும் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. வேட்பாளர்கள் இருவருமே தாம் உயர்நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தார்கள். எனவே கென்யாவின் புதிய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ ஆகும்.
வெறுங்காலுடன் ஆரம்பப்பாடசாலைக்குச் சென்ற ரூட்டோ தனது முதலாவது காலணிகளை அணியும்போது வயது 15 ஆகும். அவர் தனது இளவயதுகளில் கிராமங்களில் கோழிகளை விற்றுச் சம்பாதித்தார். 55 வயதான ரூட்டோ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் தடவையாகும். அவர் தன்னை ஏழைகளின் ரட்சகராகப் பிரசாரங்களில் சித்தரித்திருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்