ஏற்கனவே தயாராக இருந்த போலந்து இவ்வருடக் கடைசியிலேயே ரஷ்ய எரிவாயுக்கு வாசலை மூடிவிடும்.
சில வாரங்களில் போலந்துக்கும் நோர்வேக்கும் இடையிலான போல்டிக் பைப் [ Baltic pipe] என்ற எரிவாயுக்குளாய் பாவிப்புக்கு எடுக்கப்படவிருக்கிறது. நோர்வேயிலிருந்து டென்மார்க், பால்டிக் கடல் மூலமாகச் செல்லும் அந்தக் குளாய் ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்டபின்னர் படிப்படியாக இவ்வருட இறுதியிலேயே தாம் ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கத்தேவையில்லை என்கிறது போலந்து. ரஷ்யாவை ஒரு நம்பகரமான வர்த்தகக் கூட்டாளியாகத் தாம் என்றுமே கருதாததால் இத்திட்டத்தை 2001 லேயே ஆரம்பித்துவிட்டதாக போலந்தின் எரிபொருள் துறை அமைச்சர்.
ரஷ்ய ஆக்கிரமிப்பு மனப்பான்மையை எதிர்த்து மேற்கு நாடுகள் அங்கிருந்து எரிபொருட்களை வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்ததன் விளைவாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளிடையே தமக்கு எதிராக நடப்பவர்கள் என்று குறிப்பிட்டுச் சில நாடுகளுடன் செய்துகொண்டிருந்த எரிவாயு ஒப்பந்தங்களை முறித்துக்கொண்டது. படிப்படியாக ரஷ்ய எரிவாயுத் தேவையிலிருந்து விலகிக்கொள்ள முற்பட்ட ஐரோப்பிய நாடுகள் பல தற்போது ரஷ்யாவின் பதில் நடவடிக்கையால் திணறிக்கொண்டிருக்கின்றன.
போலந்து, டென்மார்க்கின் எரிவாயு நிறுவனங்கள் 2001 இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் பால்டிக் பைப் குளாய்வழி நிறுவ ஆரம்பிக்கப்பட்டது. அவ்விரு நிறுவனங்களுக்கும் சொந்தமான அக்குளாய் சுமார் 310 கி.மீ நீளமானது. அந்தக் குளாய்க்கான செலவும் சுமார் 2.5 பில்லியன் டொலராகும். அக்குளாய்கள் சுமார் 10 பில்லியன் கியூபிக் மீற்றர் எரிவாயுவைப் போலந்துக்குக் கொடுக்கக்கூடியவை. அதேயளவையே போலந்து ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்து வந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்