காலநிலை மாற்றங்கள் – தனியார் ஜெட் பாவனைச் சச்சரவுக்குள் மாட்டிக்கொண்ட பிரெஞ்ச் உதைபந்தாட்டக்குழு.

பிரெஞ்ச் உதைபந்தாட்டக் குழுவான  PSG – யும் அதன் நட்சத்திர அந்தஸ்துள்ள வீரர் கிலியன் ம்பெப்பேயும் [Kylian Mbappé] பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது கெக்கமிட்டுச் சிரித்துக் காலநிலை மாற்றச் சச்சரவுக்குள் பலமாக மாட்டிக்கொண்டார்கள். “காலநிலை மாற்றங்களின் பாதிப்பை மனதில் கொண்டு உதைபந்தாட்டக் குழுவினர் வசதியிருப்பின் சில மோதல்களுக்கு ரயிலில் போகத் தயாரா?” என்பதே நிருபரின் கேள்வி. தற்போது அவர்கள் தமது குழு பங்கெடுக்கும் மோதல்களுக்கெல்லாம் தமது பிரத்தியேக ஜெட் விமானத்திலேயே பயணித்து வருகிறார்கள் என்பதை மனதில் வைத்தே நிருபரின் அக்கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்தக் கோடையில் பிரான்ஸ் எதிர்கொண்ட கடுமையான வரட்சியும், 40 பாகை செல்சியஸுக்கு அதிகமான வெப்ப நிலையின் தாக்குதலும் நாட்டில் கால நிலைமாற்றம் பற்றிய சிந்தனையைப் பெருமளவில் உறைக்க வைத்திருக்கிறது. அதன் விளைவாக அரசியலிலும் அது ஒரு கொதிக்கும் பிரச்சினையாகப் பேசப்படுகிறது. அதன் விளைவாக விமானப் போக்குவரத்தின் நச்சுக்காற்று வெளியீடு, பறக்கும் விமானங்களில் தனியார் விமானங்களின் பங்கு போன்றவை பற்றியும் மக்களிடையேயும், சமூகவலைத்தளங்கலிலும் கருத்துப்பரிமாறல்கள் பரவலாக நடந்துவருகின்றன. 

ம்பெப்பே நிருபரின் ரயில் பயணம் பற்றிய கேள்வியைக் காதில் வாங்கியதும் கெக்கட்டமிட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். அது பக்கத்திலிருந்த மற்றைய வீரர்களுடையேயும் பரவியது. அவர்களின் நிர்வாகியான கிறிஸ்தோப் கச்சியே [Christophe Galtier] அடக்க முடியாமல் ஏற்பட்ட சிரிப்பை அடக்க முயன்றபடி வீரர்களை முறைத்தார். 

“அது மட்டுமல்ல நாம் கடற்கரையோரங்களில் காற்றாடி போட்டுக்கொண்டு நகரும் வாகனங்கள் [sand yacht] மூலம் பயணிக்கலாமா என்றும் இன்று காலையில் விவாதித்தோம்,” என்று அலட்சியமான பதிலை நிருபருக்குக் கொடுத்தார் கிறிஸ்தோப் கச்சியே. 

அவரது பதிலும் அவரது விளையாட்டுக் குழுவினரின் சிரிப்பும் நாடெங்கும், சமூகவலைத்தளங்களிலும் கோபமான விமர்சனங்களைப் பெற்றிருக்கின்றன. பாரிஸ் நகர ஆளுனர், நாட்டின் நிதியமைச்சர் உட்பட பலரும் காலநிலை மாற்றப் பிரச்சினையைக் கேலியாக்கியது பற்றிக் கண்டித்திருக்கிறார்கள். அது உலக மக்களின் அவசரமான பிரச்சினை என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 PSG தனது பக்கத்து வாதமாக ரயிலில் பயணம் செய்வது அந்த விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்கு இடையூறாக ஆகலாம் என்கிறது. ஸ்பெய்ன், ஐக்கிய ராச்சியம், இத்தாலி ஆகிய நாடுகளின் பெரிய விளையாட்டுக் குழுக்கள் வசதிகள் சரியாக இருக்கும் பட்சத்தில் தமது வீரர்களை ரயிலில் பயணம் செய்ய வைக்கிறது. உண்மையில் அவர்கள் ரயிலில் பயணம் செய்வதாயின் அதை  ஒழுங்குசெய்துகொள்ளலாம், எனவே பாதுகாப்புக்காக தனியார் விமானத்தில்தான் பறக்கவேண்டும் என்பது வெறும் சாக்குப்போக்கே, என்று கண்டிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *