தனியார் ஜெட் விமானங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு போடுங்கள் என்ற குரல் பிரான்சில் எழுந்திருக்கிறது.

பிரான்சில் சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சூழல் ஆர்வலர்கள் கொடுக்கும் அழுத்தமும், எரிபொருள் விலையுயர்வு, வெப்ப அலையின் தாக்கம் ஆகியவை அரசியலில் புதிய மாற்றங்களைக் கோருகின்றன. அவைகளிலொன்று தனியாரின் ஜெட் விமானங்களைத் தடை செய்தல், பலமான கட்டணங்கள் அறவிடுதல் வேண்டுமென்கின்றது.

பிரான்சிலிருந்து பறக்கும் 10 விகிதமான விமானங்கள் தனியாருக்குச் சொந்தமான ஜெட் விமானங்களாகும். பயணிகள் விமானங்களுடன் ஒப்பிடும்போது தனியார் ஜெட்கள் தலைக்குப் பத்து மடங்கு அதிகமாக கரியமிலவாயுவை வெளியிட்டுச் சூழலை மாசுபடுத்துகின்றன. ஜூலை மாதத்தில் பறந்த ஆறு தனியார் ஜெட்கள் மட்டும் சாதாரண பிரெஞ்ச்சுக்காரர் 52 வருடங்களில் செய்யும் சூழல் மாசுபடுதலைச் செய்திருக்கின்றன.

இந்தக் கோடையில் ஐரோப்பிய நாடுகளில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுத் திண்டாடும் நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும். தினசரி பல இடங்களில் காட்டுத்தீக்கள், வெப்ப அலை, நீர் நிலைகளில் வரட்சி, எரிசக்தித் தட்டுப்பாடும் அதனால் ஏற்பட்டிருக்கும் விலையேற்றமும் பிரென்ச் அரசியல்வாதிகள் வேகமாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று குரல்கொடுக்கக் காரணமாகும். சூழல் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவதாலேயே காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்குத் தடை போடமுடியும் என்ற குரல் பிரான்சிலும் ஓங்கி ஒலிக்கிறது. 

நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தனியார் ஜெட் விமானங்களுக்குக் கடுமையான கட்டணங்களைத் தேசிய, ஐரோப்பிய அளவில் போடவேண்டும் என்கிறார். நாட்டின் சூழல் ஆர்வலர்கள் கட்சி அவ்விமானங்களையே தடை செய்யவேண்டுமென்கிறது. பிரெஞ்ச் ஜனாதிபதி நாட்டு மக்கள் எரிசக்தியைப் பாவிப்பதைக் குறைக்கவேண்டுமென்று தீவிரமாகக் குரல்கொடுத்து வருகிறார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *