1960 களுக்குப் பின்னர் மிக மோசமான வரட்சி சீனாவுக்கு எரிசக்தித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் சூழல் மட்டுமன்றி தொழிற்சாலைத் தயாரிப்பும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. காரணம் 1960 ம் ஆண்டுக்காலத்தின் பின்னரான கடும் வரட்சிக்காலம் சீனாவை வாட்டி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே நாட்டின் பல பகுதிகளையும் தன் பிடியில் வைத்திருக்கும் வெப்ப அலை நாடு அதுபற்றிய அளவீடுகளை ஆரம்பித்த 1960 காலகட்டத்திலிருந்து இதுவரை காணாததாகும் என்று சீனாவின் அரச செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

நாட்டின் மேற்குப் பிராந்தியம் இந்த வரட்சியால் மிகவும் அதிக பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. அங்கிருந்தே நாட்டின் முக்கிய நதிகள் உருவாகின்றன. அங்கிருந்தே சீனாவின் சுத்தமான எரிசக்தியின் பெருமளவு தயாராகிறது. நாட்டின் முக்கிய தொழிற்சாலைக்கு வேண்டிய எரிசக்தி அங்கிருக்கும் அணைக்கட்டுகள் மூலமே தயாரிக்கப்படுகின்றன. 

டெஸ்லா, டொயோட்டா நிறுவனங்களின் வாகனங்கள், அவைகளின் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அங்கேயே இருக்கின்றன. அங்கிருக்கும் முக்கிய அணைக்கட்டில் பாதியளவையும் விடக் குறைவான நீரே இருக்கிறது. கடும் வெப்பநிலையின் விளைவாக மக்கள் காற்றுப்பதனப்படுத்தும் இயந்திரங்களைப் பாவிப்பது அதிகமாகியிருக்கிறது. அதனால் ஏற்பட்டிருக்கும் அதீத மின்சார தேவையை எதிர்கொள்ள அரசு தொழிற்சாலைகளுக்கான மின்சார சக்தியை மட்டுப்படுத்தியிருக்கிறது. 

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த 2030 தொடக்கம் முதல் நாட்டில் வெளியிடப்படும் நச்சுவாயுகளின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் 2060 ஆண்டில் சீனா சூழலை நச்சுபடுத்தும் எரிசக்தித் தயாரிப்பை நிறுத்திவிடும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்பட்டிருக்கும் நிலைமையோ நிலக்கரியால் எரிசக்தியுண்டாக்கும் மையங்களைச் சீனா புதியதாகக் கட்டும் நிலையை உண்டாக்கியிருக்கிறது. காலநிலை மாற்றமானது ஏற்கனவே நாட்டின் சூழலைத் தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்துச் சமூகத்துக்கு ஒவ்வாத விளைவுகளையும் உண்டாக்கி வருவதாகச் சீனாவின் அரசு குறிப்பிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *