எரிபொருட்களின் விலையுயர்வால் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கும் நோர்வே, ஐரோப்பாவுக்கு உதவுமா?
ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்துவரும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகங்களை நிறுத்திவருகின்றன. அவைகளில் முக்கியமான எரிபொருள் கொள்வனவை நிறுத்தும்போது பதிலாக வேறிடங்களில் அவற்றை வாங்குகின்றன. எரிவாயு, படிம எரிபொருட்களை ஏற்றுமதி செய்யும் நோர்வே அதனால் மிகப்பெருமளவில் இலாபம் ஈட்டுகிறது.
படிம எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதால் இவ்வருடம் மட்டுமே நோர்வே சம்பாதிக்கப்போகும் தொகை உக்ரேனின் 2020 மொத்தப் பொருளாதாரத்தின் பெறுமதிக்கு ஈடானதாகும். இவ்வருடத்தில் தான் ஏற்றுமதி செய்யும் எரிபொருட்களால் சுமார் 155 பில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டப்போகும் நோர்வே 2024 இன் இறுதியில் மட்டுமே மொத்தமாக 500 பில்லியன் எவ்ரோக்களைச் சம்பாதித்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
நோர்வே ஈட்டிவரும் கற்பனைக்கெட்டாத இலாபத்தைச் சுட்டிக்காட்டி இச்சமயத்தில் பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் ஐரோப்பாவுக்கு பொருளாதார நிதி மூலம் உதவவேண்டும் அல்லது தனது எரிபொருட்களை ஐரோப்பாவுக்குக் குறைந்த விலையில் விற்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பா ஒதுக்கியிருக்கும் பொருளாதார நிதிக்கு நோர்வே தனது இலாபத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கலாம் என்று ஒரு சாரார் குறிப்பிடுகிறார்கள்.
நோர்வேயின் பிரதமர் யோனாஸ் கார் ஸ்டூரெ இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் ஐரோப்பாவுக்கு இச்சமயத்தில் முடிந்த அளவு ஆதரவை வழங்குவது மிக அவசியம் என்று ஒத்துக்கொண்டார்.
“புத்தின் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றைத் தாக்கிக் கைப்பற்ற முயற்சித்து வருகிறார். இச்சமயத்தில் ஐரோப்பா ஒன்றுபட்டு நின்று ரஷ்யாவை எதிர்கொள்ள வேண்டும். இல்லையே ஐரோப்பாவுக்கு ஆபத்தாகவே அது முடியும். ஐரோப்பாவுக்கு ஏற்படும் ஆபத்து நோர்வேக்கும் ஆபத்தானது,” என்கிறார் ஸ்டூரெ.
சர்வதேசச் சந்தையில் தேவைக்கும், கையிருப்புக்குமிடையே நிர்ணயிக்கப்படும் விலையைச் செயற்கையாக மாற்றுவதில் ஸ்டூரெக்கு உடன்பாடில்லை. அப்படியான ஒரு நடவடிக்கையின் விளைவுகள் தவறான விளைவுகளையே உண்டாக்கும் என்கிறார் அவர். அதேபோல ஐரோப்பாவின் திட்டங்களுக்கான நிதியங்களிலும் நோர்வே பங்கெடுக்க விரும்பவில்லை.
நோர்வேயின் அரசும், பிரதமரும் ஐரோப்பாவுக்குத் தேவையான எரிபொருட்களை முடிந்த அளவு வழங்குவதே தம்மால் தற்சமயம் செய்யக்கூடிய பயனளிக்கக்கூடிய உதவி என்கிறார்கள். அதன் மூலம் படிப்படியாக ஐரோப்பா ரஷ்யாவிடம் எரிபொருளுக்குத் தங்கியிராத நிலைமையை உண்டாக்குவதே நீண்டகாலப் பயனைக் கொடுக்கும் என்று நோர்வே சார்பில் குறிப்பிடப்படுகிறது. அதற்காகத் தம்மால் முடிந்தவரை தயாரிப்பில் ஈடுபடுவதும், புதிய எரிபொருள் புதையல்களைக் கண்டுபிடிப்பதில் ஈடுபடுவதுமே நல்லது என்று நோர்வேயின் பொருளாதார ஆராய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்