மகாராணியின் இறுதியூர்வலத்துக்கு வரும் உலகத் தலைவர்களைச் சாதாரண விமானங்கள் வரும்படி வேண்டப்பட்டிருக்கிறது.
மேலுமொரு வாரத்தில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அபியில் [Westminster Abbey] நடக்கவிருக்கிறது மறைந்த மகாராணியின் இறுதிச்சடங்குகள். அச்சடங்குகளில் பங்குபற்ற உலக நாடுகளின் தலைவர்கள், அரசகுடும்பத்தினர் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியான நிலையில் ஏற்படக்கூடிய இடையூறுகளை எதிர்கொள்ள வெளிநாட்டுத் தலைவர்களை லண்டனுக்கு வரும்போது முடிந்தவரை சாதாரண விமானங்களில் வரும்படி வெளிவிவகார அமைச்சரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் லண்டனைச் சுற்றியுள்ள நகரங்களில் தங்கியிருந்து அப்பிராந்தியங்களுக்கிடையே ஹெலிகொப்டரிலும் பறப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியிருக்கிறது. அவர்கள் லண்டனில் தங்கியிருக்க இடம் ஒழுங்கு செய்யப்பட்டு தத்தம் துணையுடன் ஏற்பாடு செய்யப்படும் பேருந்துகளில் வெஸ்ட்மினினிஸ்டர் அபிக்குப் பயணம் செய்யலாம். போக்குவரத்தில் ஏற்படக்கூடும் இடைஞ்சல்களைத் தடுப்பதற்காக அத்தலைவர்களைத் தனித்தனி வாகனங்களிலும் பயணம் செய்ய எதிர்பார்க்கவேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சமீப வருடங்களில் ஐக்கிய ராச்சியம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சரித்திர நிகழ்வான மகாராணியின் இறுதி யாத்திரையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் கலந்துகொள்ளவிருக்கிறார். துருக்கி, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர், ஜப்பானியச் சக்கரவர்த்தி, ஸ்பானிய மன்னர் ஆகியோரும் லண்டனுக்கு வரவிருக்கிறார்கள்.
செப்டெம்பர் 19 திகதியைச் சுற்றியிருக்கும் நாட்களில் விமானப் பயணம் செய்பவர்களும் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய இடையூறுகளை சந்திக்கத் தயராக இருக்கும்படியும், முடிந்தால் தமது பயணத் திகதி, விமான வழிகளை மாற்றிக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்