ரஷ்யாவுடன் நட்பான உதைபந்தாட்டத்தில் மோதத் திட்டமிட்ட பொஸ்னியாவின் மீது அதிருப்தி.

பொஸ்னியா – ஹெர்சகோவினாவின் தேசிய உதைபந்தாட்ட அமைப்பு தமக்கு ரஷ்யாவின் தேசிய உதைபந்தாட்ட அமைப்பிலிருந்து வந்த அழைப்பை ஏற்று நவம்பர் 19 ம் திகதியன்று மோதலொன்றை நடத்த முடிவுசெய்திருக்கிறது. உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்ட மோதல்கள் கத்தாரில் ஆரம்பிக்க ஒரு நாளுக்கு முன்னர் செயிண்ட். பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷ்யாவும், பொஸ்னியாவும் மோதவிருக்கின்றன. பொஸ்னியாவின் உதைபந்தாட்டக் குழுவின் மத்திய தலைமைக் குழு எடுத்திருக்கும் இந்த முடிவானது குழுவின் வீரர்களையும், ஆதரவாளர்களையும் சீண்டிவிட்டிருக்கிறது.

பொஸ்னியாவின் தேசிய உதைபந்தாட்டக்குழுவின் முக்கிய விளையாட்டு வீரர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே அறிவிக்கப்பட்ட இந்த முடிவைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தேசிய குழுவிலும், ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களிலும் விளையாடும் அவர்கள் பல வழிகளிலும் வெளிப்படுத்தி வருகிறார்கள். சர்வதேச உதைபந்தாட்டக் குழுக்களின் மத்திய அமைப்பு, ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களின் மத்திய அமைப்பு ஆகியவற்றிடம் தமது அதிருப்தியை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

உக்ரேன் மீதான போரையடுத்துச் சர்வதேச அளவில் நடக்கும் விளையாட்டுக்களில் ரஷ்யாவின் தேசிய அணிகள் விளையாடுவதை எல்லோரும் தவிர்த்து வருகிறார்கள். பொஸ்னியாவுடனான உதைபந்தாட்ட மோதல் நடக்குமானால் அப்போர் ஆரம்பித்த பின்னர் ரஷ்யா சர்வதேச அளவில் பங்கெடுக்கும் முதலாவது மோதலாக இருக்கும். 

சர்வதேச மோதல்களில் ரஷ்யாவின் தேசிய அணியை எதிர்கொள்வதில்லை என்று எடுத்த முடிவுகளுக்குள் “நட்பான மோதல்கள்” அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது. பொஸ்னியாவைத் தவிர அஸார்பைஜான், ஈரான் ஆகிய நாட்டினருடனும் “நட்பான மோதல்களில்” ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும், 1990 களில் பால்கன் போரால் பாதிக்கப்பட்ட பொஸ்னியா ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யாவுடன் நட்பான மோதலில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டிப் பலரும் எதிர்க்கின்றன.

பொஸ்னியாவின் முடிவானது ரஷ்யாவில் பலத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. அதே நேரம் உக்ரேனில் பலத்த முகச்சுழிப்பை உண்டாக்கியிருக்கிறது. பொஸ்னியா தனது முடிவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று உக்ரேன் சார்பில் வேண்டுதல் விடப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *