கொவிட் 19 காலத்தின் பின்னர் முதல் தடவையாக சீனாவின் அதிபரின் வெளிநாட்டு விஜயம்.
இவ்வருட ஏப்ரல் மாதத்தில் “Global Security Initiative” என்ற பாதுகாப்புக் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகச் சீனா அறிவித்திருந்தது. அதைப் பற்றிய விபரங்களை விவாதிப்பதற்காக ஷீ யின்பின் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். கொரோனாத்தொற்றுக்கள் பரவலால் சீனா எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் பின்னர் அவர் செய்யும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
சீனாவைச் சுற்றியிருக்கும் கடற்பிராந்தியத்தில் தனது கடற்படையை பாவித்துச் சீனா ஆக்கிரமித்து வருவதால் சீனக்கடலைச் சுற்றியிருக்கும் நாடுகள் பெரிதும் அதிருப்தியடைந்திருக்கின்றன. அத்துடன் சீனா தனது பொருளாதார பலத்தைப் பாவித்து வளர்ந்து வரும் நாடுகளுக்குக் கடன் வலை விரித்து ஆக்கிரமித்து வருவதால் பசுபிக், இந்து சமுத்திரப் பிரந்தியத்து நாடுகளும் எரிச்சலடைந்திருக்கின்றன. அதை எதிர்கொள்ள அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் ஒரு பாதுகாப்புக் கூட்டணியை ஏற்படுத்தியிருக்கின்றன. அதை எதிர்கொள்ள தானும் தனது ஆதரவு நாடுகளும் ஒரு பாதுகாப்புக் கூட்டணியை அமைக்கவிருப்பதாகச் சீனா அறைகூவியிருந்தது.
ரஷ்யாவைத் தவிர மத்திய ஆசிய நாடுகள் சிலவற்றையும் சேர்த்துக்கொண்டு தனது திட்டப்படி பாதுகாப்புக் கூட்டுறவு அமைப்பை நிறுவ விரும்புகிறார் ஷீ யின்பிங். அவரது திட்டமானது உக்ரேனை ஆக்கிரமிக்க ரஷ்யா விபரித்துவரும் அரசியல் கோட்பாடுகளுக்கு வசமாகவே அமைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா சார்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
உஸ்பெக்கிஸ்தானில் இந்தியா, பாகிஸ்தான் ஆகியவையும் பங்குகொள்ளும் எட்டு நாடுகளின் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாடு நடக்கவிருக்கிறது. ரஷ்யா, கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான், கஸக்ஸ்தான், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் அந்த மாநாட்டில் பங்குகொள்கின்றன.
ஷி யின்பிங் நாடு திரும்பிய பின்னர் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடக்கவிருக்கிறது. அந்த மாநாட்டின் மூலம் மூன்றாவது தடவையாகவும் கட்சியின், நாட்டின் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். ஷி யின்பிங். ஐந்து வருடங்களிலான தவணைகளுக்குத் தலைமை தாங்கும் சீனத் தலைவர்களில் எவரும் இரண்டு தவணைகளுக்கு மேல் அப்பதவியில் இருந்ததில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்