அங்கத்துவ நாடுகளில் குறைந்தபட்ச ஊதியமொன்றை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் முடிவுசெய்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எல்லாம் ஆகக்குறைந்த ஊதியமாக ஒரேயொரு தொகையை நிர்ணயிப்பதில் ஐரோப்பியப் பாராளுமன்றம் அங்கீகாரம் செய்தது. அங்கத்துவ நாடுகளில் தற்போது இருக்கும் துறைசார்ந்த ஊதியம் நிர்ணயிப்பு, ஆகக்குறைந்த ஊதியம் ஆகியவற்றுக்கு மாற்றாக ஐ.பாராளுமன்றத்தினால் நிர்ணயிக்கும் தொகை அமுலுக்கு வரும்.

சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகள் குறிப்பிட்ட ஆகக்குறைந்த ஊதியப் பிரேரனையை எதிர்த்தன. இந்த நாடுகளில் தொழிலாளர்கள் சங்கங்களும், அவைகளுக்கான முதலாளிகள் அமைப்புக்களும் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஊதியங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அவர்களிடையே இணக்கம் வராத பட்சத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை அவர்களுக்குக் கொடுத்துதவுகிறது. ஆகக்குறைந்த ஊதியம் என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டால் பல முதலாளிகள் அதையே அடிப்படையாகப் பாவிப்பார்கள் என்பதால் அப்படியான ஒரு தொகையை இந்த நாட்டின் தொழிலாளர்களோ, முதலாளிகளோ விரும்பவில்லை. இரண்டு தரப்பாருக்கும் இணக்கமான தொகையை அவர்களே நிர்ணயிப்பதால் தொழிலாளர்கள் போராட்டங்கள் இந்த நாடுகளில் தவிர்க்கப்படுகின்றன.

505 அங்கத்துவர்களைக் கொண்ட பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆகக்குறைந்த ஊதிய நிர்ணயித்தல் இம்மாத இறுதியில் ஒன்றியத்தின் மத்திய குழுவால் ஏற்றுக்கொள்ளப்படும். ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவரும் இதுபோன்ற வரையறைகளை எந்த அங்கத்துவ நாடு மீதும் உடனடியாகத் திணிக்க முடியாது. 

ஒன்றியத்தால் நிர்ணயிக்கப்படும் ஆகக்குறைந்த ஊதிய மட்டத்தை நாடுகள் படிப்படியாக அமுலுக்குக் கொண்டுவர இரண்டு வருட அவகாசம் கொடுக்கப்படும். நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு வரையறுக்கப்படும் அத்தொகையை விட அதிகளவில் நாட்டிலேயே வேறு வகையாக முடிவுசெய்யும் முறைகள் இருப்பின் அந்த நாடுகள் ஒன்றியத்தின் முடிவை அமுல்படுத்த வேண்டியதில்லை. அதைவிடக் குறைவாகவே ஊதியம் வழங்கும் நாடுகள் தமது நிலைப்பாட்ட ஒன்றியம் படிப்படியாக கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *