மத்திய ஆசியாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்குச் சீனா சவால் விடுமா?

உஸ்பெகிஸ்தானின் சாமர்கந்த் நகரில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருக்கிறது. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்று வல்லரசுகளும் அதில் பங்குகொள்கின்றன. மேற்கு நாடுகளின் சர்வதேச ஆளுமையை விரும்பாத அந்த மூன்று நாடுகளுக்கும் அதற்கெதிரான ஒரு சர்வதேசச் சக்தியை அமைத்துக்கொள்ள விருப்பமுண்டு. அதே சமயம் அச்சக்தியின் மத்தியில் தான் இருக்கவேண்டும் என்ற திட்டமும் அந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. எனவே, அவர்களிடையேயான உறவு எப்படி செயற்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. 

சீனாவின் அதிபர் ஷீ யின்பிங் தனது சுற்றுப்பயணத்தில் முதன்முதலாகச் சந்தித்த நமர் கஸக்ஸ்தானின் கசீம் ஸொமார்ட் தொகயேவ் ஆகும். முன்னாள் சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த அந்த நாட்டின் இறையாண்மைக்குத் தான் முழு ஆதரவும் கொடுப்பதாக ஷீ யின்பிங் தெரிவித்தார்.

கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான், கஸக்ஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், துருக்மேனிஸ்தான் ஆகிய முன்னாள் சோவியத்தின் அங்கங்கங்களாக இருந்த, ஐந்து மத்திய ஆசிய நாடுகளிலும் ரஷ்யாவின் அரசியல், பொருளாதார ஆதிக்கம் பலமானது. அந்த நாடுகளின் முதிய தலைமுறைகளிடையே ரஷ்யாவுக்கான ஆதரவு தொடர்ந்து வருகிறது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அந்த நாடுகளுக்குப் பயத்தைக் கொடுத்திருக்கிறது.

உக்ரேனை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ரஷ்யத் தேசியவாதிகளின் நோக்கம் எதிர்காலத்தில் அந்த நாடுகளையும் தம் வசப்படுத்துவதாக இருக்கலாம் என்ற அச்சம் மத்திய ஆசிய நாட்டுத் தலைவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் உண்டு. அந்த நாடுகள் எவையும் ரஷ்யாவின் போரை ஆதரிக்கவில்லை. உக்ரேனின் பிராந்தியங்களாக இருந்து தம்மைத் தனி நாடுகளாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட லுகான்ஸ்க், டொனெஸ்க் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கஸக்ஸ்தான் ஜனாதிபதி தொகயேவ் பகிரங்கமாக அறிவித்திருந்தார். விளைவாக ரஷ்யாவின் முன்னாள் பிரதமரின் பகிரங்கமான சீற்றத்துக்கும் ஆளாகினார். 

ஷீ யின்பிங் அதே கஸக்ஸ்தான் ஜனாதிபதியைத் தனது வெளிநாட்டு விஜயத்தில் முதல் நபராகச் சந்தித்ததும், அந்த நாட்டின் இறையாண்மைக்கு உத்தரவாதம் கொடுத்ததும் ரஷ்யாவுக்கு ஒரு எச்சரிக்கையே என்று கணிக்கப்படுகிறது. ஆசிய நாடுகளிடையே ஆதிக்கம் செலுத்துவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெளிவுபடுத்தவும், ரஷ்யா அந்த நாடுகளில் ஆளுமை செலுத்துவதை முழுசாக அனுமதிக்க முடியாது என்பதையுமே சீன ஜனாதிபதி தனது நடத்தையின் மூலம் காட்டியிருப்பதாகப் பலர் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *