போரைத் தீவிரமாக்கும் திட்டத்தை அறிவித்த அதே சமயம் 300 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டார்கள்.
ரஷ்யாவின் இராணுவத்தினரில் ஒரு பகுதியைப் போருக்குத் தயார்செய்ய அறைகூவிய அதே சமயம் ரஷ்யாவும் உக்ரேனும் தம்மிடையே சுமார் 300 போர்க்கைதிகளைப் பரிமாறிக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருந்த புத்தினுடைய நெருங்கிய நண்பர் உக்ரேன் அரசியல்வாதி விக்டர் மெட்வெட்சுக்கும் உக்ரேனிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 55 பேரில் ஒருவராகும்.
போர்க்கைதிகளைப் பரிமாறும் முடிவானது துருக்கிய ஜனாதிபதி எர்டகான், சவூதி அரேபியப் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான் ஆகியோர் ஆகியோரின் மத்தியஸ்தத்தின் உதவியால் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. உக்ரேனுக்காகப் போர் புரிய வெளிநாடுகளிலிருந்து சென்ற 10 பேர் ரஷ்யாவினால் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களது விடுதலை சவூதியில் ரியாட் நகரில் நடந்திருக்கிறது. அவர்களில் தலா இரண்டு அமெரிக்கர்களும், பிரிட்டிஷ்காரரும் உட்பட, சுவீடன், கிரவேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாகும். முஹம்மது பின் சல்மானுக்கும், புத்தினுக்கும் இருக்கும் நெருங்கிய உறவுகளின் விளைவாகவே மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட இருந்த இவர்கள் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டதாகச் சுட்டிக்காட்டிக் குறிப்பிட்ட நாடுகள் சவூதிய இளவரசனுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றன.
ரஷ்யா மொத்தமாக 215 பேரை விடுதலை செய்திருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் உக்ரேனின் மரியபூல் நகரம் ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டவர்களாகும். அப்போரில் ரஷ்யாவின் இராணுவத்தை நீண்ட நாட்களாக எதிர்த்துப் போராடிய முக்கிய உக்ரேனிய இராணுவத் தளபதிகள் சிலரும் அடங்கும். அத்தளபதிகள் மூவரும் துருக்கியிலேயே தங்கியிருப்பார்கள். மற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகும். அதற்கான மத்தியஸ்தங்களைச் செய்ததற்காக உக்ரேனிய ஜனாதிபதி தனது நன்றிகளை எர்டகானுக்குச் செலுத்தியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்