ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் லிஸ் டுருஸ் தமது இஸ்ராயேல் தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு மாற்றத் திட்டமிடுகிறார்.
ஜெருசலேமைத் தமது தலைநகரமாக்க விரும்புகிறவர்கள் இஸ்ராயேலின் யூதர்கள் மட்டுமன்றி, பாலஸ்தீனர்களும் கூட. தெல் அவிவ்வை உத்தியோகபூர்வமான தலைநகராகக் கொண்டிருக்கும் இஸ்ராயேல் அங்கிருக்கும் தூதுவராலயங்களை ஜெருசலேமுக்கு மாற்றுவதன் மூலம் படிப்படியாக ஜெருசலேமைத் தமது தலைநகராக எதிர்காலத்தில் மாற்றிக்கொள்ள சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அந்த வழியில் டொனால் டிரம்ப் காலத்தில் அமெரிக்கா தனது தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது. புதிய ஐக்கிய ராச்சியப் பிரதமர் டுருஸ் அதே வழியில் ஜெருசலேமுக்குத் தமது தூதுவராலயத்தை மாற்றும் எண்ணத்திலிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்கத் தூதுவராலயம் ஜெருசலேமில் திறக்கப்பட்ட பின்னர் இஸ்ராயேல் பல நாடுகளுக்கு அதைத் தொடரும்படி அழைப்பு விடுத்தது. அதைச் செய்யும் நாடுகளுக்குப் பிரத்தியேக உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தது. குவாத்தமாலா, கொசோவோ ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை ஜெருசலேமில் தூதுவராலயங்களைக் கொண்டிருக்கின்றன.
ஐக்கிய ராச்சியத்தின் தூதுவராலயம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் எண்ணத்தை டுருஸ் கொண்டிருப்பதாகவும் அதை அவர் இஸ்ரேலியப் பிரதமர் யார் லபிட்டிடம் தெரிவித்திருப்பதாகவும், அதற்குத் தகுந்த இடத்தைத் தேடுவதாகவும் செய்திகள் கசிந்திருக்கின்றன. இஸ்ராயேல் உத்தியோகபூர்வமாக அதுபற்றி எந்தச் செய்தியையும் இதுவரை வெளியிடவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்