எமிரேட்ஸ், பஹ்ரேன், மொரொக்கோ, சூடானுக்கு அடுத்ததாக கொஸோவோ இஸ்ராயேலுடன் கைகோர்த்தது.

தனக்கு முன்னர் இஸ்ராயேலுடன் கைகோர்த்த முஸ்லீம் நாடுகளை விட ஒரு படி மேலே போய் ஜெருசலேமை இஸ்ராயேலுடைய தலைநகராக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இராஜாங்கபூர்வமான தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டது கொஸ்வோ.

https://vetrinadai.com/news/israel-morocco-friends/

கொஸோவோவின் வெளிவிவகார அமைச்சர் மெலிஸா ஹரதினாய் தனது இஸ்ராயேல் சகாவுடன் தொலைத்தொடர்பு மூலமாக நடந்த நிகழ்ச்சியில் இரு நாடுகளுக்கும் இடையே நட்பான தொடர்புகள் பற்றிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இஸ்ராயேலிய வெளிவிவகார அமைச்சர் அஷ்கெனாஸி அந்த விழாவில் கொஸோவோவின் தூதுவராலயத்தை ஜெருசலேமில் திறக்கும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார்.

பாலஸ்தீனர்களின் தனி நாட்டுக் கோரிக்கையில் இஸ்ராயேலால் கைப்பட்டிருக்கும் கிழக்கு ஜெருசலேம் தமது தலைநகராக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையும் அடங்கியிருக்கிறது. பாலஸ்தீனர்களுக்கான தனி நாடு அமைக்கப்படும்வரை ஜெருசலேமை எவரும் இஸ்ராயேலின் தலைநகராக ஏற்றுக்கொள்ளலாகாது என்ற சர்வதேச நிலைப்பாட்டை டிரம்ப் முதலாவதாக உடைத்தெறிந்து அமெரிக்காவின் தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு மாற்றியிருந்தார்.

அதையடுத்து ஜெருசலேமில் தனது தூதுவராலயத்தைத் திறந்த இன்னொரு நாடு குவாத்தமாலா மட்டுமே. ஜோ பைடன் அமெரிக்கா தொடர்ந்தும் ஜெருசலேமிலேயே தன் தூதுவராலயத்தை வைத்திருக்கும் என்று அறிவித்திருக்கிறார். 

ஒரு காலத்தில் யூகோஸ்லாவியக் குடியரசில், செர்பிய மாநிலத்தின் ஒரு பகுதியாக அமுக்கப்பட்டிருந்த கொஸோவோ மக்கள் செர்பியர்களை ஜென்ம விரோதிகளாகப் பாவித்து வந்தனர். யூகோஸ்லாவிய உடைந்தபின்னர் கொஸோவோவைத் தமது நாட்டின் ஒரு பகுதியாகப் பிரகடனப்படுத்திய செர்பியா மீது 2008 இல் நாட்டோ குண்டுத்தாக்குதல் நடத்தியது. 

கொஸோவோ – செர்பியப் பிளவும் அமெரிக்கா கொஸோவாவின் பக்கம் நின்றதும் தொடர்ந்தது. இந்த நிலைமையை மாற்றி இருவருக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தைத் தான் பதவி விலக இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்படுத்தி வைத்தார் டொனால்ட் டிரம்ப். 

அந்த விழாவில் செர்பியா தனது இஸ்ரேலியத் தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் என்று குறிப்பிட்டது. ஆனால், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதே விழாவில் எதிர்பாரதவிதமாக கொஸோவோ தானும் இஸ்ராயேலுடன் நட்புக் கொண்டாடத் தயார் என்று அறிவித்திருந்தது. 

யூகோஸ்லாவியாவின் இன்னொரு பகுதியாக விளங்கிய அல்பானியர்களே கொஸோவோவின் பெரும்பான்மைக் குடிகள். 2008 இலிருந்து தன்னைத் தனி நாடாகப் பிரகடனம் செய்துகொண்ட கொஸோவோவை அமெரிக்காவும், சில ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்துவிட்டாலும் உலகின் ஒரு பகுதி நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. 

செர்பியாவுடனான ஒற்றுமை ஒப்பந்தத்தில் பங்குகொண்ட கொஸோவோவின் ஜனாதிபதியாக இருந்த ஹஸீம் தாச்சி செர்பியாவுடனான விடுதலைப் போர்க் காலத்தில் தன் மக்கள் மீதும், செர்பர்கள் மீதும் நடத்திய போர்க்குற்றங்களுக்காக சர்வதேசப் போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *