இன்று கூடும் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் மியான்மார் நிலைமை விவாதிக்கப்படும். பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகள் கொண்டாட்டம்.

மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் பாராளுமன்றம் கூடமுதலே, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரின் நிலைமை பற்றிச் சிந்திக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை இன்று கூடவிருக்கிறது. இக்கூட்டத்தில் மியான்மாரில் தொடர்ந்தும் வாழும் சுமார் 600, 000 ரோஹின்யா இனத்தவர் பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும்.

நாட்டின் பிரதமர் ஔங் சான் சூ ஷீ கைது செய்யப்பட்டார் என்பதைத் தவிர அவர் எங்கிருக்கிறார் என்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவரைத் தவிர மேலும் 45 பேர் கைதாகியிருக்கிறார்கள். இராணுவம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு வருட அவசரகாலச் சட்டத்தை அறிவித்திருக்கிறது. 

https://vetrinadai.com/news/military-coup-myanmar/

ஔங் சான் சூ ஷீ தனது கட்சிக் காரியதரிசி மூலமாக நாட்டு மக்களை இராணுவத்தின் செயலுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். நாட்டில் ஆங்காங்கே மக்கள் கூடி எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். தலைநகரில் இராணுவத்துக்கு ஆதரவாகவும் மக்கள் கூடிக் கொண்டாடியிருக்கிறார்கள்.

உலகின் பெரும்பாலான நாடுகள் மியான்மார் இராணுவத்தைக் கண்டித்திருக்கின்றன. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இராணுவம் ஆட்சியிலிருந்து விலகியிருந்ததால் அமெரிக்கா மியான்மார் மீதான தனது பொருளாதாரக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக விலக்கியிருந்தது. மீண்டும் பொருளாதாரத் தடைகளை மியான்மார் மீது நடைமுறைப்படுத்தப்போவதாக ஜோ பைடன் அரசு எச்சரித்திருக்கிறது.

ஔங் சான் சூ ஷீ கைது செய்யப்பட்டது பங்களாதேஷுக்குப் புகலிடம் கேட்டுச்சென்ற ரோஹின்யா மக்களில் ஒரு சாராரால் கொண்டாடப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. “எங்களின் கடைசி நம்பிக்கையாக நாம் அவர் இருந்தார். அனால், அவரது ஆட்சியில் நாம் எமது மண்ணிலிருந்து விரட்டப்பட்டோம். எனவே, அவர் கைதுசெய்யப்பட்டதை நாம் கொண்டாடுவதில் தவறில்லை,” என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மியான்மாரில் ராக்கின்யே மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 740,000 ரோஹின்யா மக்கள் அங்கிருந்து ஔங் சான் சூ ஷீ காலத்தில் விரட்டப்பட்டார்கள். அவர்களுடைய கிராமங்கள் சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன. கூட்டாக ஆங்காங்கே பலர் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள். 

மியான்மாரின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் இராணுவத்தின் தலைவர் மின் ஔங் ஹுலாயங் ரோஹின்யாக்களைத் திட்டமிட்டு அழித்ததற்காக சர்வதேசப் போர்க்குற்ற நீதிமன்றத்தில் தேடப்படுபவராகும். அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி ஐ.நா கேட்டிருக்கிறது. இராணுவத்தின் குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஔங் சான் சூ ஷீ மூடி மறைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *