பெண்கள் ஹிஜாப்பை ஒழுங்காக அணிதல் சட்டம் அவசியம் என்கிறார் ஈரானிய ஷீயா மார்க்க மதத்தலைவர் அலி கொமெய்னி.
ஈரானில் எழுந்திருக்கும் ஹிஜாப் அணிதலுக்கு எதிரான போராட்டங்கள் பலரின் உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்துக்கும் அதிகமாகச் சளைக்காமல் போராடிவரும் ஈரானியர்களின் திடமான எதிர்ப்புகளால் ஆட்சியாளர்கள் கலங்கியிருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், மதத் தலைவர்கள் சிலரும் கலாச்சாரப் பொலீசார் பெண்களின் உடையணிதலைக் கண்காணிப்பதை நிறுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். ஈரானின் அதிமுக்கிய ஆன்மீகத் தலைவரான அலி கமெய்னியோ “ஒழுங்காக ஹிஜாப் அணிதல் அவசியம்,” என்று நகரங்களிலிருக்கும் மத அதிகாரங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
ஷரியார் ஹைதாரி, கரீம் ஹுசேனி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈரானியப் பொலீசார், பெண்கள் எப்படி ஹிஜாப் அணிகிறார்கள் என்று கவனிப்பதற்காகப் பயன்படுத்தப்படலாகாது என்றும் மாஷா அமினியின் இறப்பு பற்றி ஒழுங்காக ஆராயப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“கலாச்சாரப் பொலீசார் பெண்களின் ஹிஜாப் பற்றிக் கண்காணிப்பது இஸ்லாத்துக்கு எதிரானது,” என்கிறார் ஆயதுல்லா அலி அக்பர் மசூதி கொமெய்னி என்ற மதத் தலவர். நீதிபதிகள் மட்டுமே ஹிஜாப் பற்றிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால் அவர்கள் கூடப் பெண்கள் ஹிஜாப்பை ஒழுங்காக அல்லது ஒழுங்கின்றி அணிந்திருப்பதாகக் குற்றஞ்சாட்ட முடியாது என்று விளக்குகிறார்.
“இஸ்லாத்தின் அதிமுக்கிய விடயம் ஹிஜாப். இஸ்லாத்தின் எதிரிகளே ஹிஜாப் அணியாமல் ஒரு இஸ்லாமிய ஒழுங்கைக் கொண்டுவர விரும்புகிறார்கள். முன்னைய அரசாங்கங்கள் இங்கே ஹிஜாப் பற்றிய விதிமுறைகளை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை. தற்போது அவைபற்றிக் கவனித்து இயங்கிவரும் கலாச்சாரக் காவலர்களை நாம் பாராட்டவேண்டும்,” என்கிறார் இன்னொரு மத போதகர் அஹமது அலமொல்ஹூடா.
பெரும்பாலான ஈரானிய மத உயர்பீடங்களும், நாட்டின் உளவுப்படையினரின் முக்கியத்துவர்களும் மாஷா அமினியின் இறப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை நாட்டின் எதிரிகள் என்றே வெள்ளியன்று நடந்த மதபோதகங்களிலும், வெளியிட்ட அறிக்கைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்