வீட்டிலிருந்து பணியாற்றல் பற்றிய ஊழியர்களினதும், நிர்வாகிகளின் கணிப்புகளில் பெரும் வேறுபாடு தெரிகிறது.
ஒரு ஊழியர் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கும், அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதற்கும் இடையிலான வித்தியாசம் பற்றி மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட மதிப்பீடு அவர்களின் ஆக்கவளம் பற்றி முரண்பாடான பதில்களைக் கொடுத்திருக்கிறது. 87 % ஊழியர்கள் தாம் வீட்டிலிருந்து செய்யும் பணியின் ஆக்கவளம் அலுவலகங்களிலிருந்து செய்வதற்கு ஈடானது அல்லது அதைவிட அதிகமானது என்கிறார்கள். அவர்களின் நிர்வாகிகளில் 80 % பேர் அலுவலகத்திலிருந்து அவர்கள் பணியாற்றுவதே அதிக ஆக்கவளம் மிக்கது என்கிறார்கள்.
11 நாடுகளில் 20,000 பணியாளர்களிடையே இந்தக் கருத்து மதிப்பீடு நடத்தப்பட்டது.
ஆக்கவளம் பற்றிய இரண்டு முக்கிய பகுதியினருக்கும் இடையேயான இந்தப் பெரும் வேறுபாடு மைக்ரோசொப்ட் நிறுவனத் உயர்மட்டத் தலைமையில் அதுபற்றிய விபரங்களை அறிந்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியிருக்கிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்யா நடெல்லா இதுபற்றிக் குறிப்பிடுகையில், “இரண்டு சாராருக்கும் இடையேயிருக்கும் இந்தக் கணிப்பு நிறுவனங்களிலிருக்கும் ‘ஆக்கவளச் சித்தப்பிரமை’ என்ற விடயத்தைப் பற்றி எதிரொலிக்கிறது. உற்பத்தித்திறன் பற்றிய எதிர்பார்ப்பு பற்றி இரண்டு சாராருக்கும் இருக்கும் மிகப்பெரும் பிளவையே இது காட்டுகிறது. இதை ஆழமாக அணுகவேண்டும்,” என்கிறார்.
கொரோனாத்தொற்றுக்காலத்தில் உலகெங்கும் பெரிதளவில் பரவிய “வீட்டிலிருந்து பணியாற்றுதல்” அக்காலம் முடிவடைந்தும் தொடர்கிறது. வீட்டிலிருந்து பணியாற்றக்கூடிய வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற விளம்பரங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. அப்படியான வேலைகள் தொடரவே போகின்றன. ஆனாலும், அவைகளின் தொகை தேவைக்கதிகமாக அதிகரித்திருக்கலாம் இனிமேல் குறையலாம் என்று நிறுவனங்கள் சில கருதுகின்றன.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் தமது 50 % பணியை வீடுகளில் செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சர்வதேச நிறுவனங்கள் பலவும் வீட்டிலிருந்து பணிசெய்பவர்களால் தமக்கு ஏற்படும் இலாபங்களைக் கவனித்து ஆதரித்து வருகிறார்கள். ஆனால், டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான ஏலொன் மஸ்க் அதற்கு எதிரானவர். தனது பணியாளர்கள் அனைவரும் இனிமேல் கட்டாயமாக அலுவலகத்துக்கு வரவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறார். “அலுவலகத்திற்கு வரவில்லையென்றால், நீங்கள் பணியிலிருந்து விலகிவிட்டதாகவே கருதப்படுவீர்கள்,” என்று அவர் தனது நிறுவன ஊழியர்களுக்குச் செய்தியனுப்பியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்