ஆஸ்ரேலியா மனித உரிமைகளைப் பாதுக்காக்காதமைக்காக ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

ஆஸ்ரேலியாவின் வட முனைக்கும் பாபுவா நியூகினியாவுக்கும் இடையே இருக்கின்றன Torres Strait தீவுகள். கடல் மட்டத்தைவிட அதிகம் உயரத்திலில்லாத அத்தீவுகளில் வாழும் மக்கள் காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாமலிருக்க ஆஸ்ரேலியா எதையும் செய்யாமல் கைகட்டிக்கொண்டு இருப்பதற்காக ஐ.நா – வின் மனித உரிமைகள் அமைப்பு ஆஸ்ரேலியாவைக் கண்டித்திருக்கிறது. அந்த நீரிணையின் தீவுகளில் ஏற்பட்டு வரும் கடல்நீரின் மட்ட அதிகரிப்பானது உலகெங்கும் நீர்மட்டம் உயர்ந்து வருவதை விட இரட்டிப்பானது.

தொர்ரேஸ் நீரிணைக்குள் நான்கு தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன. அவைகளில் மொத்தமாகச்  274 தீவுகளுள்ளன. சில பத்துத் தீவுகளில் தொர்ரேஸ்தீவுப் பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.மீன்பிடித்தல், விவசாயம் ஆகியவைகள் அவர்களை வாழவைக்கின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் அவர்களது வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கால் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்குப் புனிதமான தலங்களாகக் கருதப்படும் மூதாதையரின் சமாதிகள் பலவற்றை நீர் ஆக்கிரமித்து அங்கிருந்த எலும்புகள் பல இடங்களில் பரவியிருக்கின்றன.

தொர்ரெஸ் தீவுக்குடிகள் எட்டுப் பேர் தமது மூன்று பிள்ளைகளுடன் சேர்ந்து ஆஸ்ரேலியா மீது,  மூன்று வருடங்களுக்கு முன்னர் ஐ.நா-வில் ஒரு குற்றச்சாட்டைச் சமர்ப்பித்திருந்தார்கள். தமது தீவுகள் கண்ணுக்கு முன்னாலேயே நீரால் மூழ்கிப் போவதாகவும் அதைத் தடுக்கும் விதமாக ஆஸ்ரேலியா தனது நச்சுப்புகை வெளியேற்றம், வெப்ப அதிகரிப்பு ஆகியவற்றைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடாமலிருப்பதே அதற்குக் காரணம் என்று அக்குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடல் மட்டம் உயர்வதைத் தடுக்கும் விதமாக ஆஸ்ரேலியா எல்லை வரப்புக்களைக் கட்டவில்லையென்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தொர்ரெஸ் தீவு மக்களின் குற்றச்சாட்டை ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பு ஏற்றுக்கொண்டு ஆஸ்ரேலியாவின் செயலற்ற தன்மை தீவு மக்களின் மனித உரிமைகளுக்கெதிரானது என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. தொர்ரெஸ் தீவுப் பழங்குடியினரின் வாழ்வாதாரம், கலாச்சார உரிமை ஆகியவையை ஆஸ்ரேலியா பறித்திருப்பதாகக் ஐ.நா குறிப்பிடுகிறது. 

ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்புக் கொடுத்திருக்கும் இந்தத் தீர்ப்பானது மனித உரிமை அமைப்புக்களால் பெரிய அளவில் சிலாகிக்கப்படுகிறது. உலகில் இதேபோன்ற விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பலரும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துத் தமது நிலைமையைச் சர்வதேச அளவில் சுட்டிக்காட்டி நியாயம் கேட்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆஸ்ரேலியா குறிப்பிட்ட தீவுமக்களின் வாழ்வாதாரத்தைப் பேணும் விதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று ஐ.நா கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆஸ்ரேலிய அரசின் சார்பில் ஐ.நா-வின் மேற்கண்ட சுட்டிக்காட்டல் பற்றி இதுவரை கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. வழக்கமாக இதுபோன்ற ஐ.நா-வின் மனித உரிமைக்குழுவினரின் சுட்டிக்காட்டல்களை நாடுகள் ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதுண்டு. ஆனால், அதற்காகக் குறிப்பிட்ட நாடுகள் மீது தண்டனை விதிக்கும் உரிமை ஐ.நா-வுக்கு இல்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *