சவூதி அரேபியாவின் பிரதமராகினார் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான்.
சவூதி அரேபியாவின் அரசன் தனது அரசாங்கத்தின் உறுப்பினர்களிடையே மாற்றங்களை அறிவித்திருக்கிறார். அதன் மூலம் ஏற்கனவே நாட்டின் முக்கிய நடவடிக்கைகளின் காரணகர்த்தாவாக இருப்பவர் என்று வர்ணிக்கப்படும் இளவரசன் முஹம்மது பின் சல்மான் நாட்டின் பிரதமராக்கப்பட்டிருக்கிறார். 86 வயதான அரசன் சல்மான் பின் அசீஸ் கையிலேயே அந்தப் பதவி இதுவரை இருந்து வந்தது.
ஏற்கனவே முக்கிய பதவிகளிலிருந்த வெளிவிவகார அமைச்சர், முதலீட்டு அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் அவ்வப்பதவிகளிலேயே மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் இராணுவப் பாதுகாப்பு, நிதி, எண்ணெய் வளத்துறை, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை முஹம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசன் என்ற இடத்துக்கு வந்ததிலிருந்து தானே எடுத்து வருகிறார்.
தற்போதைய நிலபரம் போல சவூதி அரேபியா எதிர்காலத்திலும் தனது வருமானத்துக்கு பெற்றோலியம் போன்ற பொருட்களில் தங்கியிருக்கலாகாது, சூழலை மாசுபடுத்தாத தயாரிப்புக்களில் நாட்டை ஈடுபடுத்த வேண்டும், காலநிலைக்குப் பங்கம் விளைவிக்காத குடியேற்றங்களை மக்களுக்கு உண்டாக்கவேண்டும் போன்ற எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய முஹம்மது பின் சல்மானின் 2030 பட்டயம் உலகின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்