ஐக்கிய ராச்சியத்தில் பரவிவரும் Don´t Pay UK- இயக்கம் புதிய அரசை வீழ்த்துமா?

ஐரோப்பாவெங்கும் எரிபொருள் விலையேற்றத்தின் விளைவுகள், பக்கவிளைவுகள் எல்லாமே சாதாரண மனிதர்கள் மீது பளுவாகியிருக்கிறது. சில மாதங்களாகவே அதிகரித்துவரும் அவை நேரடியாக மின்சாரக்கட்டண அதிகரிப்பாகவும் எல்லோரையும் பாதிக்கிறது. அதனால் கோபமடைந்த சுமார் 200,000 பேர் தாம் மின்சாரக்கட்டணத்தைக் கொடுக்கப்போவதில்லை என்று Don´t Pay UK- இயக்கம் மூலம் முடிவெடுத்திருக்கிறார்கள். கோடைகாலத்தில் சுமார் இரண்டு டசின் பேருடன் ஆரம்பித்த அவ்வியக்கம் மிகப் பெரியதாக வளர்ந்து வருகிறது.

இடதுசாரிகளின் அரசியல் கோட்பாடுகளில் உண்டானது இந்தத் திட்டம். ஒரு நாட்டின் அரசியல் செயற்பாட்டில் இருக்கும் ஒரவஞ்சனை மனப்பான்மையால் சமூகத்தில் ஒரு பகுதியினர் பாதிக்கப்படுவதில் பங்கெடுக்க மறுப்பதையே இந்த வழியில் அந்த இயக்கத்தினர் காட்டுகிறார்கள். 

மின்சாரக் கட்டணங்கள் குறிப்பிட்ட அளவு அதிகரித்தால் அதை அரசே கொடுக்கும் என்று லில் டுருஸ் அரசு அறிவித்திருக்கிறது. மக்களுக்கு அந்த மான்யத்தை வழங்கவிருக்கும் அரசு எதற்காக மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிண்டு கொடுக்க பல மில்லியன்களைக் கொடுக்கவேண்டும் என்று கேட்கிறார்கள் Don´t Pay UK- இயக்கத்தினர். நாட்டின் அரசியல் பொருளாதாரத்திலிருக்கும் தவறாக முறுக்கப்பட்ட நிலபரத்தையே அது காட்டுகிறது என்பதால் அதற்குத் துணைபோகலாது என்பது Don´t Pay UK- இயக்கத்தின் நிலைப்பாடாகும்.

இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற Dario Fo என்ற இத்தாலியப் நாடகப்படைப்பாளரே இந்த விதமான இயக்கத்தை ஆரம்பித்தவராகும். Non Si Paga! Non Si Paga! என்ற பெயரிலான அவரது மிகப் பிரபலமான நாடகம் [“விலையைக் கொடுக்கப் பணமில்லை, கொடுக்க முடியாது”] பேராசை பிடித்த வியாபாரிகள் விலைகளை அதிகரித்துக் கொண்டே போவதையும், அதிகாரிகள் தமது தொழிலாளர்களைப் பிழியும் அதே சமயம் அவர்களின் ஊதியத்தைக் குறைத்துக்கொண்டே போவது பற்றியும் குறிப்பிடுகிறது. அதேபோன்ற படைப்புக்கள் மூலம் அரசியல் விழிப்புணர்ச்சியேற்படுத்தியதே அவருக்கான நோபல் பரிசுக்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டது. 

பிரிட்டனில் வளர்ந்துவரும் Don´t Pay UK- இயக்கமானது மார்கிரட் தட்சருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த Anti-poll tax  இயக்கத்துக்கு ஈடானதாகலாம் என்று அஞ்சப்படுகிறது.1990 களில் ஐக்கிய ராச்சியத்தின் பிரதமராக இருந்த தட்சர் இடதுசாரிகளை ஒடுக்கக் கொண்டுவந்த சட்டங்களில் ஒன்றான “ஒவ்வொரு தலைக்கும் வரி” என்ற சட்டம் குடிமக்களின் வருமானம், பொருளாதார நிலையைக் கவனிக்காமல் எல்லோருக்கும் ஒரே அளவு வரியை அறிமுகப்படுத்தியது. அதையெதிர்த்துக் கொதித்தெழுந்த மக்களின் Anti-poll tax இயக்கம் தட்சரைப் பதவியிலிருந்து அகற்றியது.

தற்போது ஐக்கிய ராச்சியத்தில் மட்டுமே வளர்ந்துவரும் Don´t Pay UK- இயக்கம் அந்த நாட்டில் மட்டுமன்றி ஐரோப்பாவெங்கும் பரவலாம் என்று சில அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். உக்ரேன் மீதான போரின் பக்கவிளைவுகளான பணவீக்கம், விலையுயர்வுகள், அடிப்படை உணவுக்கான தட்டுப்பாடு ஆகியவையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பியர்களிடையே இருக்கும் அரசியல் தலைமைகள் மீதான அதிருப்தியை அவ்வியக்கம் முடுக்கி விடலாம் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *