2015 ஐ விட அதிகமான அகதிகள் இவ்வருடத்தில் இதுவரை ஜெர்மனிக்குள் தஞ்சம் கோரியிருக்கிறார்கள்.
மிக அதிகமான எண்ணிக்கையில் அகதிகள் பலர் தமது நகர்களுக்குள் அடைக்கலம் கோரி வந்திருப்பதால் ஜெர்மனிய நகரங்கள் பல அவர்களுக்கான வசதிகளைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. 2015 ம் ஆண்டு ஐரோப்பாவுக்குள் நுழைந்த அகதிகளில் பலர் ஜெர்மனிக்குள்ளேயே தஞ்சம் கோரினார்கள். அவ்வருடம் முழுவதும் அங்கே குவிந்தவர்களின் எண்ணிக்கையை ஜெர்மனி இப்போதே தாண்டியிருக்கிறது. அதனால் நாட்டின் நகரசபை அரசியல் தலைவர்கள் மத்திய அரசிடம் உதவி கோரி உள்துறை அமைச்சரைச் சந்தித்திருக்கிறார்கள்.
தஞ்சம் கோரியிருக்கும் அகதிகளுக்குத் தேவையான தங்கும் வசதிகளைப் பல ஜெர்மனிய நகரங்களால் உண்டாக்கிக் கொடுக்க முடியவில்லை. அதனால், பல்லாயிரக்கணக்கானோர் தற்காலிக கொட்டாரங்களிலேயே தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வருட ஆரம்பத்தில் ஜெர்மனிய அரசு தங்குமிடங்கள் பலவற்றைத் தயார் செய்திருப்பினும் அவை போதுமானதாக இல்லை.
ரஷ்யாவால் தாக்கப்பட்ட உக்ரேனிலிருந்து மட்டுமே ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பெப்ரவரி மாதத்தின் பின் ஜெர்மனிக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களில் மூன்றிலொரு பங்கினர் குழந்தைகளும், இளவயதினராகும். வயது வந்தவர்களில் 70 % பெண்களாகும்.
வீட்டு வசதிகளை மட்டுமன்றி, குழந்தைகளுக்கான பாலர் பாதுகாப்பு மையங்கள், பாடசாலைகள், சமூக ஆதரவு ஆகியவற்றை வழங்குவது தமக்கு மிகப் பெரும் சவாலாக இருப்பதாக நகரசபை அதிகாரங்கள் தெரிவிக்கின்றன. செப்டெம்பர் கடைசிவரையில் 134, 908 பேர் அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். அது கடந்த வருடத்தில் அந்தச் சமயத்தில் வந்த விண்ணப்பங்களை விட மூன்று மடங்கு அதிகமானதாகும். ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருப்பதால் உக்ரேன் அகதிகளின் எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்