முதுகெலும்புள்ள காட்டு மிருகங்கள் கடந்த 50 ஆண்டுகளில் 69 % எண்ணிக்கையில் குறைந்திருக்கின்றன.
சர்வதேச இயற்கை பேணும் அமைப்பான[World Wide Fund for Nature] உலகெங்குமுள்ள காட்டு மிருகங்களின் வேகமான அழிவு பற்றி எச்சரிக்கை செய்திருக்கிறது. முதுகெலும்புள்ள காட்டுமிருகங்கள் சராசரியாக 69 விகிதத்தால் கடந்துபோன 50 ஆண்டுகளில் குறைந்திருக்கிறது. தென்னமெரிக்காவில் அவைகள் 90 % ஆல் குறைந்துபோயிருக்கின்றன. இது 1970 – 2018 ஆண்டுகளுக்கு இடையேயான கணிப்பீட்டின் விபரங்களாகும்.
வாழும் பூமி அமைப்பின் [Living Planet] 32,000 பிராந்தியங்களில் வாழும் 5230 விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பிலிருந்து மேற்கண்ட விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. பால்கொடுத்து வளர்க்கும் மிருகங்கள், மீன்கள், பறவைகள், தவளைகள், ஊரும் விலங்குகள் ஆகியோர் பற்றிய விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றன.
காடுகளை அழித்தல், அளவுக்கதிகமான கொள்வனவுப் பழக்கங்கள், சூழலை அசட்டை செய்யும் விவசாயம் ஆகியவையே சர்வதேச அளவில் விலங்குகளின் வேகமான அழிவுக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. தென்னமெரிக்காவில் விலங்குகளின் அழிவுக்குக் காரணம் அமெஸான் காடுகளின் அளவு குறைந்து வருவதாகும். வித்தியாசமான ஆக்கிரமிக்கும் தாவரவகைகள் ஆங்காங்கே புதியதாகப் பரவுவதால் அங்கிருக்கும் சூழலும் அதைச் சார்ந்த விலங்குகள் அழிதலும் ஒரு முக்கிய காரணமாகும்.
காலநிலை மாற்றத்தால் உலகம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தும், வேகமாக அழிந்துவரும் விலங்குகளின் எண்ணிக்கைப் பிரச்சினையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளப்படவேண்டியவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலக நாடுகள் தத்தம் நாட்டுக் காட்டு விலங்குகளைப் பாதுகாத்துப் பேணும் நடவடிக்கைகளை எடுத்தலை 2030 க்கு முன்னரே ஆரம்பிக்கவேண்டும். அதன் மூலமாகவே மேலும் பல விலங்கினங்கள் அழிதல், முக்கியமான சில விலங்கினங்கள் முற்றாக அழிதலைத் தடுத்து நிறுத்த முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்