தொற்றுவியாதியான வயிற்றுப்போக்கு வியாதி உலகின் பல நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.
கொலரா என்றழைக்கப்படும் வயிற்றுப்போக்குத் தொற்று வியாதியானது வேகமாகப் பல நாடுகளில் பரவி வருவதாக சர்வதேச ஆரோக்கியத்தை கோட்பாடாகக் கொண்டு செயற்படும் எல்லைகளில்லாத மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்திருக்கிறது. இந்த வருடத்தில் மட்டுமே ஈரான், ஈராக், சிரியா, லெபனான் உட்பட 30 நாடுகளில் அந்தத் தொற்றுவியாதி வேகமாகப் பரவுவது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
போர், வெள்ளப்பெருக்கு, வரட்சி ஆகியவைகளினால் ஏற்பட்டிருக்கும் மக்களின் புலம்பெயர்தல் தற்சமயம் கொலறா தொற்றுநோயாகப் பரவிவருவதற்கான முக்கிய காரணம் என்று எல்லைகளில்லாத மருத்துவர்கள் அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. கிருமிகள் அழுக்கு நீர், தேங்கியிருக்கும் நீர் ஆகியவை மூலமாகப் பரவுகின்றன.
படுவேகமாகப் பரவக்கூடியது கொலரா. வயிற்றுப்போக்கு, வாந்தியெடுத்தல் ஆகியவற்றால் உடலிலிருக்கும் நீர்த்தன்மை குறைந்துவிடுகிறது. உடனடியான மருத்துவம் இல்லாவிட்டால் மரணமே முடிவாக இருக்கும்.
ஜூன் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்த கொலராப் பரவல் மத்திய கிழக்கு நாடுகளில் பரவியது. ஹைத்தியிலும் அது பரவிப் பல உயிர்களைக் கொன்று வருகிறது. கொலராவுக்கான தடுப்பு மருந்துகள் தேவையான அளவு கிடைப்பதில்லை என்றும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். எனவே இரண்டு தடுப்பூசிகள் கொடுக்கவேண்டியிருப்பினும் ஒன்றையே கொடுத்து வருகிறார்கள். அது தேவையான அளவு பாதுகாப்பை ஒருவருக்கு நீண்டகாலத்துக்குக் கொடுப்பதில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்