“உக்ரேன் மீதான போர் காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு ஆசீர்வாதம்”, என்ற குரல் ஒலிக்கிறது.
“உக்ரேன் மீதான போரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது நீண்ட கால விளைவாக உலகுக்கு நல்லதே உண்டாகும் என்று தெரிகிறது. இயற்கை வளங்களை மீண்டும் மீண்டும் பாவிக்கும் தொழில்நுட்பங்களுக்கு மாறுதல், சூழலுக்கு, வேலைவாய்ப்புகளுக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமன்றி எரிசக்திக்கு மற்றவர்களிடம் நம்பியிருக்கத் தேவையில்லாத நல்விளைவையும் தருமென்று நாடுகள் பல புரிந்துகொள்ளத் தொடங்குகின்றன,” என்கிறார் ஐ.நா-வின் வானிலை கண்காணிப்பு அதிகாரத்தின் நிர்வாகக் காரியதரிசி பெட்டரி தாலாஸ்[Petteri Taalas].
தாலாஸ் சொல்வது போரில் ஒரு நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும்போது, கிண்டலான தொனியிலிருப்பது போலத் தோன்றினாலும் அதன் பின்னணியிலிருக்கும் விபரங்களை கணித்துப் பார்க்கும்போது உண்மையாகவே தெரிகிறது. அதே கருத்தைச் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் சர்வதேச புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைவர் பிரான்செஸ்கோ ல மாறாவும் குறிப்பிட்டிருக்கிறார்.
உக்ரேனை ஆக்கிரமித்த ரஷ்யா மீதான முடக்கங்களால் சகலவிதமான எரிசக்திகளின் விலைகளும் படு வேகமான உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. இதனால் பல நாடுகளில் காற்று, நீர், சூரியசக்தி ஆகிய இயற்கை வளங்களைப் பாவித்துப் பெறக்கூடிய எரிசக்தியிலான முதலீடுகள் பெருமளவு முதலீடு செய்யப்பட்டு வருகின்றன. அப்படியான புதுப்பிக்கக்கூடிய வளங்களாலான எரிசக்தியின் விலையும் படிம எரிசக்தியின் விலைக்கு ஈடாக இருப்பதால் அப்படியான முதலீடுகள் சாத்தியமாகியிருக்கிறது.
படிம எரிபொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் வரும் 5 – 10 வருடங்களுக்கு அவைகள் பெருமளவில் கொள்வனவு செய்யப்படும். அதன் விலைகள் அதிகரித்திருப்பதால் இயற்கை வளங்களால், சூழலுக்குப் பாதிப்பின்றி உண்டாக்கப்படும் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். எனவே அவற்றில் பெருமளவில் முதலீடுகள் செய்யப்படுவதால் உலகம் வெகு வேகமாக புதுப்பிக்கப்படக்கூடிய வளங்களாலான எரிசக்திப் பாவனைக்கு மாறும் என்பதே அவர்களின் கூற்றுக்களுக்கான விளக்கமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்